search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் வீடுகளை சூழ்ந்து தெருக்களில் தேங்கிய மழை வெள்ளம்
    X
    வேலூரில் வீடுகளை சூழ்ந்து தெருக்களில் தேங்கிய மழை வெள்ளம்

    வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழையால் வீடுகளுக்குள் வெள்ளம்

    வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
    வேலூர்:

    வேலூரில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    நேற்று காலை முதல் மாலை வரை வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. 1 மணி நேரம் தொடர்ந்து பலத்த மழையும், தொடர்ந்து மிதமான மழையும் பெய்தது.

    இதனால் வேலூர் புதிய பஸ் நிலையத்தின் உட்புறம், திருமலை திருப்பதி தேவஸ்தானம், கிரீன் சர்க்கிள், காமராஜர் சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. பலத்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கன்சால்பேட்டை சமத் நகரில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். விடிய விடிய தூங்காமல் தவித்தனர்.

    இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வேலூர்- ஆற்காடு சாலையில் மழைநீரோடு, கழிவுநீரும் கலந்து ஓடியது. தொடர்ந்து 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல வாணியம்பாடி பகுதியில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆம்பூர், திருப்பத்தூர், காட்பாடி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.வாணியம்பாடியில் அதிகபட்சமாக 50.2 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

    வேலூர்-45.4, ஆம்பூர்- 39.2, வாணியம்பாடி-50.2, திருப்பத்தூர்-20.3.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மாலை மேகம் மந்தமாக காணப்பட்டது. இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. சாத்தனூர் அணை பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. மழை வெள்ளம் தென்பெண்ணை ஆற்றில் கலந்து ஓடியது.

    போளூர், கலசப்பாக்கம், செங்கம், திருவண்ணாமலை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சாத்தனூர் அணையில் அதிகபட்சமாக 73.6 மில்லிமீட்டர் மழை பதிவானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருவண்ணாமலை-28, செங்கம்-21.6, சாத்தனூர் அணை-73.6, போளூர்-48.4, கலசப்பாக்கம்-27, கீழ்பென்னத்தூர்-8.8. #tamilnews
    Next Story
    ×