search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு போக்குவரத்து கழக நஷ்டத்துக்கு ஊழல் தான் காரணம்- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
    X

    அரசு போக்குவரத்து கழக நஷ்டத்துக்கு ஊழல் தான் காரணம்- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

    அரசு போக்குவரத்து கழக நஷ்டத்துக்கு ஊழல் தான் காரணம் என்று கோவை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். #PMK #AnbumaniRamadoss #EdappadiPalaniswami
    கோவை:

    கோவை விமான நிலையத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக முதல்- அமைச்சர் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்து உள்ளதை வரவேற்கிறோம்.

    நெடுஞ்சாலை துறையில் கடந்த 7 ஆண்டுகாலமாக ஊழல் நடைபெற்று உள்ளது என்று முன்னாள் கவர்னர் ரோசைய்யா மற்றும் தற்போதைய கவர்னர்பன்வாரிலால் புரோகித் ஆகியோரிடம் நான் நேரில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள ஊழல் பிரிவு விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே தான் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்து உள்ளார்கள்.

    இந்த சூழலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தானாக பதவி விலக வேண்டும் அல்லது கவர்னர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    பதவியில் உள்ள ஒரு முதல்-அமைச்சரை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம்.

    நெடுஞ்சாலை துறை மட்டும் அல்லாது அனைத்து துறைகளிலும் ஊழல் குவிந்து உள்ளது. ஊழலில் தமிழகம் 3- வது இடத்தில் உள்ளது என ஆய்வு கூறுகிறது.


    கவர்னர் உயர்கல்வி துறையில் துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்து உள்ளது என்று கூறி விட்டு மறுநாள் மாற்றி கொண்டார். ஒரு கவர்னர் ஊழல் நடந்து உள்ளது என்று கூறுவது தவறு. அவர் தான் இதனை விசாரிக்க வேண்டிய இடத்தில் உள்ளார்.

    ரபேல் போர் விமானம் சம்பந்தமாக மத்திய அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும். முந்தைய ஆட்சியில் ஒரு விமானம் ரூ. 550 கோடி. இந்த ஆட்சியில் ரூ. 1,600 கோடிக்கு பேசி உள்ளார்கள்.

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போதிய ஊதியம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு தேவையான ஊதியம் வழங்குங்கள்.

    தனியார் போக்குவரத்து கழகம் லாபத்தில் இயங்கி கொண்டு இருக்கிறது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் உள்ளது. இதற்கு காரணம் ஊழல்.

    ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலையில் 2 மாதம் ஆகியும் ஏன் கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் ஊழல் நடப்பது பா.ஜனதா அரசுக்கு தெரியாதா? ஏன் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஊழலை ஆதரிப்பது தானே அர்த்தம்.

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கார் மூலமாக சேலத்துக்கு புறப்பட்டு சென்றார். #PMK #AnbumaniRamadoss #EdappadiPalaniswami #Banwarilalpurohit
    Next Story
    ×