search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடன் பிரச்சினை- லாட்ஜில் வி‌ஷம் குடித்து ஆசிரியர் தற்கொலை
    X

    கடன் பிரச்சினை- லாட்ஜில் வி‌ஷம் குடித்து ஆசிரியர் தற்கொலை

    கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த ஆசிரியர் லாட்ஜில் வைத்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் தூணேரியை சேர்ந்தவர் சந்திரசேகர் (45). இவர் கூக்கல் துறை அரசு உயர் நிலைப் பள்ளியில் இடை நிலை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரோஜினி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    அவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பே‌ஷன் டெக்னாலஜி இறுதியாண்டு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு செல்வதாக சந்திர சேகர் தனது மனைவியிடம் கூறி சென்றுள்ளார். இரவு வீடு திரும்பவில்லை. அவர் பள்ளியில் தங்கி இருக்கலாம் என மனைவி நினைத்து கொண்டார்.நேற்று காலையும் அவர் வீடு திரும்பவில்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட் ஆப் என வந்தது.

    இந்த நிலையில் மேட்டுப் பாளையம் வந்த சந்திர சேகர் அங்குள்ள ஒரு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளார். தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என லாட்ஜ் ஊழியர்களிடம் தெரிவித்து விட்டு அறை கதவை பூட்டி கொண்டார். நீண்ட நேரம் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் மேலாளர் சதிஷ் குமார் மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ஏட்டு பாலு மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சந்திரசேகர் படுக்கையில் பிணமாக கிடந்தார்.

    படுக்கையில் சாணி பவுடர் சிதறி கிடந்தது. எனவே சந்திரசேகர் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    தற்கொலை செய்து கொண்ட சந்திர சேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அவரது மனைவி சரோஜினிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் உறவினர்களுடன் மேட்டுப்பாளையம் வந்தார்.

    கடன் பிரச்சினை காரணமாக சந்திர சேகர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இவர் கோத்தகிரியில் சொந்தமாக வீடு கட்டி உள்ளார். இதற்காக அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    அதனை கட்ட முடியாததால் மனம் உடைந்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. சந்திரசேகர் மனைவியும் தனது கணவர் தற்கொலைக்கு கடன் பிரச்சினை தான் காரணம் என தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×