search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்

    திருவெண்ணைநல்லூர் அருகே கோவிலில் தொடர்ந்து நடைபெறும் திருட்டால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் இருந்து பெரிய செவலை செல்லும் வழியில் ஏரிக்கரையில் கரை மேல் அழகர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு திருவெண்ணைநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும் சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள் .

    இந்த கோவிலில் பெரிய செவலை பகுதியை சேர்ந்த நடராஜன்(வயது 50) என்பவர் பூசாரியாக உள்ளார்.

    நேற்று இரவு வழக்கம் போல் கோவிலில் பூஜைகள் முடிந்த பின்னர் கோவிலை பூட்டி விட்டு நடராஜன் வீட்டுக்கு புறப்பட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நள்ளிரவில் கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் கோவிலின் உள்ளே இருந்த 4 அடி உயரமுள்ள உண்டியலை அடியோடு பெயர்த்து எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த நடராஜன் கோவிலின் முன்பக்க கதவு உடைக்க பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கோவிலின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த உண்டியல் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. கொள்ளையர்கள் தூக்கி சென்ற உண்டியலில் ரூ.70 ஆயிரம் இருந்தது கூறப்படுகிறது.

    இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் நடராஜன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோவில் உண்டியலை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    கடந்த 1 மாதத்துக்கு முன்பு இந்த கோவிலின் முன்புறம் இருந்த சிறிய உண்டியலை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றது குறிப்பிடதக்கது.

    இந்த கோவிலில் தொடர்ந்து நடைபெறும் திருட்டால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    Next Story
    ×