search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி முன்பு தேங்கி கிடக்கும் மழை தண்ணீர்- பெற்றோர், மாணவர்கள் ‘திடீர்’ ஆர்ப்பாட்டம்
    X

    பள்ளி முன்பு தேங்கி கிடக்கும் மழை தண்ணீர்- பெற்றோர், மாணவர்கள் ‘திடீர்’ ஆர்ப்பாட்டம்

    கும்பகோணம் அருகே பள்ளி முன்பு தேங்கி கிடக்கும் மழை தண்ணீரை அப்புறப்படுத்த கோரி பெற்றோர், மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த தாராசுரம் அருகே வலையப்பேட்டை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கும்பகோணம் பகுதியில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கியது.

    இதேபோல் வலையப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பும் மழை தண்ணீர் குளம்போல் தேங்கியது. கடந்த 3 நாட்களாக மழை தண்ணீர் வடியாமல் அப்படியே உள்ளதால் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மிகுந்த சிரமப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் சாலையும் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் இருந்தது. இதனால் மழை நீரில் நடந்து செல்லும் மாணவர்கள் சிலநேரங்களில் தடுமாறி கீழே விழும் காயம் அடைந்து வந்தனர்.

    இதையடுத்து தேங்கி கிடக்கும் மழைநீரை அப்புறப்படுத்தி, சாலையை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆவேசம் அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி முன்பு இன்று காலை திரண்டனர்.

    பிறகு பள்ளி முன்பு தேங்கி கிடக்கும் மழை தண்ணீரை அப்புறப்படுத்த கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி சீருடையுடன் மாணவ- மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கு வந்த போலீசார் , இதுசம்பந்தமாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்று பெற்றோர்களும், மாணவர்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #tamilnews
    Next Story
    ×