search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடுவிக்கப்பட்ட படகுகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள்-மீனவர்கள் இன்று இலங்கை பயணம்
    X

    விடுவிக்கப்பட்ட படகுகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள்-மீனவர்கள் இன்று இலங்கை பயணம்

    விடுவிக்கப்பட்ட படகுகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள், மீனவர்கள் இன்று இலங்கை புறப்பட்டுச் செல்கின்றனர். #Fisherman #Srilanka #Fishermanboat

    ராமேசுவரம்:

    இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் அடிக்கடி சிறைபிடிக்கப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

    இதில் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகள் மட்டும் விடுவிக்கப்படாத நிலை உள்ளது.

    இலங்கையில் நீதிமன்ற பாதுகாப்பில் உள்ள படகுகளை மீட்கக்கோரி தமிழக மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதன் அடிப்படையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இலங்கை அரசுடன் பேசியது. இதனைத் தொடர்ந்து நல்லெண்ண அடிப்படையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு டிசம்பர் வரையில் சிறைபிடிக்கப்பட்ட 184 படகுகளை விடுதலை செய்து இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதனைத் தொடர்ந்து படகுகளை எடுத்துச் செல்ல இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    184 படகுகளையும் தமிழகம் கொண்டு வர முடியுமா? அவை சேதம் அடைந்துள்ளதா? என்பவை குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் குழுவினர் இன்று மாலை மதுரையில் இருந்து விமானம் மூலம் இலங்கை செல்கின்றனர்.

    ராமேசுவரம், புதுக்கோட்டை, காரைக்காலைச் சேர்ந்த 11 மீனவர்கள் மற்றும் 5 மீன்வளத்துறை அதிகாரிகள் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    இதற்காக ராமேசுவரம் மீனவ சங்கத்தலைவர்கள் சேசுராஜா, ஆல்வின் பெர் னாண்டோ, அடைக்கலம், காளிமுத்து, ராஜேந்திரன் ஆகியோர் மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத் தலைமையில் இன்று காலை மதுரை புறப்பட்டனர்.

    மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் கதிரேசன் (ராமநாதபுரம்), முருகேசன் (புதுக்கோட்டை) மற்றும் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோரும் மீட்புக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் இலங்கை செல்கின்றனர்.

    அங்கு 15-ந் தேதி வரை தங்கி இருந்து மன்னார், ஊர்க்காவல்துறை, திரிகோணமலை, யாழ்ப் பாணம் பகுதிகளில் உள்ள படகுகளின் நிலை குறித்து இந்தக்குழு ஆய்வு செய்ய உள்ளது. #Fisherman #Srilanka #Fishermanboat

    Next Story
    ×