search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் முன்பதிவில்லா டிக்கெட் மையம் மூடல் - பயணிகள் கடும் அவதி
    X

    திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் முன்பதிவில்லா டிக்கெட் மையம் மூடல் - பயணிகள் கடும் அவதி

    திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் முன்பதிவில்லா டிக்கெட் மையம் மூடப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் முன்பதிவில்லா டிக்கெட் வினியோக மையம் தனியாக இயங்கி வந்தது. இதில் 8 கவுண்ட்டர்களில் டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வந்தது. பின்னர் கணினி பழுது, ஊழியர்கள் பற்றாக்குறை என 3 கவுண்ட்டர்களை மூடினர். தானியங்கி டிக்கெட் எந்திரம், செல்போனில் செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின் மேலும் ஓரிரு கவுண்ட்டர்களை மூடினர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 2 கவுண்ட்டர்களில் முன்பதிவில்லா டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முன்பதிவில்லா டிக்கெட் வினியோக மையம் முழுவதுமாக மூடப்பட்டு விட்டது. மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு மட்டும் ஒரு கவுண்ட்டர் தனியாக இயங்கி வருகிறது. இதற்கான அறிவிப்பை அதிகாரிகள் ஒரு தாளில் எழுதி ஒட்டி வைத்துள்ளனர்

    முன்பதிவில்லா டிக்கெட் மையம் மூடப்பட்டதால் முன்பதிவு மையத்தில் உள்ள கவுண்ட்டர்களில் முன்பதிவில்லா டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் முன்பதிவு டிக்கெட் பெறுபவர்களும், முன்பதிவில்லா டிக்கெட் பெறுபவர்களும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்க வேண்டி உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுவதோடு ரெயிலை தவறவிடுகிற நிலை ஏற்படுகிறது. மேலும் முன்பதிவு டிக்கெட் எடுக்க வரும் பல பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கை கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது:-

    திருச்சி ஜங்ஷன் ரெயில்நிலையத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும். காலை நேரத்தில் பல்லவன், திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களுக்கு முன்பதிவில்லா டிக்கெட் எடுக்க கூட்டம் எப்போதும் அலைமோதும்.

    இதேபோல குருவாயூர் எக்ஸ்பிரஸ், நெல்லை, திண்டுக்கல், ஈரோடு பயணிகள் ரெயில் உள்ளிட்ட ரெயில்களில் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணிகள் அதிகஅளவில் பயணிப்பது உண்டு. தற்போது முன்பதிவில்லா டிக்கெட் மையம் முழுவதுமாக மூடப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது பெரும் சிரமமாக உள்ளது. டிக்கெட் வாங்க வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே தற்போது முன்பதிவு மையத்தில் முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கு தனியாக 4 கவுண்ட்டர்களை ஒதுக்க வேண்டும்.

    முன்பதிவு டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளுக்கு தனி கவுண்ட்டர்கள் ஒதுக்க வேண்டும். அப்போது தான் முன்பதிவில்லா டிக்கெட்டை எளிதில் பெற்று பயணிக்க முடியும். தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் இருந்தாலும் அதில் ஒரே நேரத்தில் டிக்கெட் பெற வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனை ஒப்பிடும் போது நேரடியாக கவுண்ட்டரில் டிக்கெட் பெறுவதே மேல் என நினைக்க தோன்றுகிறது.

    தொழில்நுட்ப வளர்ச்சியில் செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் பெறும் வசதியை குறிப்பிட்ட அளவே பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பெருமளவு பயணிகள் கவுண்ட்டர்களில் டிக்கெட் பெறுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே முன்பதிவில்லா டிக்கெட்டை பயணிகள் சிரமம் இல்லாமல் பெற தனி கவுண்ட்டர்களை ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை தொடர்ந்து மற்ற ரெயில் நிலையங்களிலும் முன்பதிவில்லா டிக்கெட் மையம் மூடப்பட்டு முன்பதிவு மையத்தில் முன்பதிவில்லா டிக்கெட் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற தகவல் பரவிவருகிறது. முதற்கட்டமாக பெரிய சந்திப்பு ரெயில்நிலையமான திருச்சி ஜங்ஷனில் இருந்து அதிகாரிகள் சோதனை முயற்சியை தொடங்கி உள்ளதாக ரெயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர். 
    Next Story
    ×