search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் வெளிநாட்டு மணல் விற்பனை மந்தம்
    X

    சென்னையில் வெளிநாட்டு மணல் விற்பனை மந்தம்

    சென்னையில் வெளிநாட்டு மணல் வாங்க கட்டுமான துறையினரிடம் ஆர்வம் குறைவாக இருப்பதால் விற்பனை மந்தமாக நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.

    அதன்படி வெளிநாட்டு மணல் இறக்குமதிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் எண்ணூரில் உள்ள காமராஜர் துறை முகத்துக்கு 56,750 மெட்ரிக் டன் ஆற்றுமணல் கடந்த 23-ந் தேதி கொண்டு வரப்பட்டது. இதையடுத்து கப்பலில் இருந்து மணலை இறக்கும் பணி நடந்தது.

    ஆன்-லைனில் மணல் தேவை என்று புக் செய்தால் பொதுமக்கள் வீடுகளுக்கு நேரடியாக சப்ளை செய்யப்படும் என்றும் வெளியிட்டது.

    மணல் விற்பனையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் மணல் தட்டுப்பாடு குறையும் என்றும் தெரிவித்துள்ளது.

    மேலும் ஆன்-லைனில் புக் செய்யப்படுவதால் மணல் கடத்தல் தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கப்பலில் இருந்து மணல் இறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து விற்பனை தமிழக அரசு தொடங்கியது. மணல் தட்டுப்பாடு நிலவுவதால் விற்பனை அதிகமாகி இருக்கும் என்று பொதுப்பணித்துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால் அதிகாரிகள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லாமல் மந்தமாகவே உள்ளது.

    இதுவரை ஆன்-லைனில் 40 புக்கிங் மட்டுமே நடந்து உள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறையினர் தரப்பில் கூறும்போது, “ஒரு யூனிட் மணல் ரூ.10,350-க்கு விற்கப்படுகிறது.

    விற்பனை தொடங்கிய முதல் நாளில் 30 லாரிகள் புக்கிங் செய்யப்பட்டது. மணல் புக் செய்யப்பட்டவுடன் தாமதமின்றி ஒரே நாளில் சப்ளை செய்யப்படுகிறது. ஒவ்வொரு லாரிகளிலும்2 முதல் 5 யூனிட் மணல்வரை அனுப்பப்படுகிறது” என்றார். வெளிநாட்டு மணல் வாங்க கட்டுமான துறையினரிடம் ஆர்வம் குறைவாக இருப்பதால் விற்பனை மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கு திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள ஆற்றில் சட்டவிரோதமாக மணலை கடத்தி விற்பனை செய்வதுதான் காரணம் என்று மணல் விற்பனையாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாட்டு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பன்னீர்செல்வம் கூறும் போது, “மணல் கடத்தும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்தாத வரை மணல் வாங்குபவர்களை இழுக்க முடியாது ” என்றார்.

    Next Story
    ×