search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறுக்குத்துறை தைப்பூச மண்டபத்தில் புஷ்கரம் விழா நடத்த அனுமதி- ஐகோர்ட்டு உத்தரவு
    X

    குறுக்குத்துறை தைப்பூச மண்டபத்தில் புஷ்கரம் விழா நடத்த அனுமதி- ஐகோர்ட்டு உத்தரவு

    தாமிரபரணியில் ஓடும் தண்ணீரின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில், தைப்பூசப் படித்துறை, குறுக்குத்துறை படித்துறை ஆகிய இடங்களில் பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கும் படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #HighCourt
    சென்னை:

    ஐகோர்ட்டில், புலவர் மகாதேவன் என்பவர் தொடர்ந்துள்ள மனுவில், ‘நெல்லை மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றில் வருகிற 12-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை புஷ்கரம் விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

    இதற்காக நெல்லையில் தைப்பூசப் படித்துறை மற்றும் குறுக்குத்துறை படித்துறை ஆகிய இடங்களில் பக்தர்கள் புனித நீராட தடை விதித்து மாவட்ட கலெக்டரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.

    நெல்லையப்பர், காந்திமதி அம்மன் தீர்த்தவாரி உற்சவங்கள் நடைபெறும் தைப்பூசப் படித்துறையில் புனித நீராட தடை விதித்து இருப்பது சட்டவிரோதமானது.

    அதேபோல, குறுக்குத் துறை படித்துறையில் நீராடுவதற்கு தடை விதித்து இருப்பதையும் ஏற்க முடியாது. எனவே இந்த 2 படித்துறைகளிலும் புஷ்கர விழாவின்போது பக்தர்கள் நீராட அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘தாமிரபரணியில் ஓடும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும்போது, அதில் சுழல் ஏற்படும். குளிப்பவர்கள் அதில் சிக்கினால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

    எனவே, அங்கு பெய்யும் மழையின் அளவு, தாமிரபரணியில் ஓடும் தண்ணீரின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில், தைப்பூசப் படித்துறை, குறுக்குத்துறை படித்துறை ஆகிய இடங்களில் பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கவேண்டும்’ என்று கூறியுள்ளார். #HighCourt
    Next Story
    ×