search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் மழை நீடிப்பு - மீண்டும் முழு கொள்ளளவை நெருங்கும் வைகை அணை நீர்மட்டம்
    X

    தொடர் மழை நீடிப்பு - மீண்டும் முழு கொள்ளளவை நெருங்கும் வைகை அணை நீர்மட்டம்

    கன மழை நீடித்து வருவதால் வைகை அணை நீர்மட்டம் இந்த ஆண்டில் 2-வது முறையாக மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. #VaigaiDam
    கூடலூர்:

    தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதால் பெரியாறு மற்றும் வைகை அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    வைகை அணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. இதனையடுத்து சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது மீண்டும் மழை அதிகரித்துள்ளதால் இன்னும் ஒரு சில நாட்களில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 62.04 அடியாக உள்ளது. நேற்று வரை 1190 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இன்று காலை முதல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 360 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 3226 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் இருப்பு 4002 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் வைகை அணை நீர்மட்டம் ஒரு சில நாளில் முழு கொள்ளளவான 71 அடியை எட்டும்.

    முல்லைப்பெரியாறு அணையில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுபடி 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு 139.99 அடி வரை தண்ணீர் தேக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    தற்போது பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 133.80 அடியாக உள்ளது. அணைக்கு 2756 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1946 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5586 மி. கன அடியாக உள்ளது. பெரியாறு அணை நீர்மட்டமும் விரைவில் 140 அடியை தாண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49 அடியாக உள்ளது. நீர்வரத்து 199 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.67 அடி. வரத்து 189 கன அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 3.6, தேக்கடி 9.2, கூடலூர் 26, சண்முகாநதி அணை 31, உத்தமபாளையம் 4.9, வீரபாண்டி 14, வைகை அணை 7, மஞ்சளாறு 9, மருதாநதி அணை 37.1, சோத்துப்பாறை 11, கொடைக்கானல் 45.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. #VaigaiDam

    Next Story
    ×