search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் மாளிகை புகார்- நக்கீரன் கோபால் திடீர் கைது
    X

    கவர்னர் மாளிகை புகார்- நக்கீரன் கோபால் திடீர் கைது

    அரசுக்கு எதிராக வெறுப்பையும் உணர்ச்சியையும் எழுத்தால் தூண்டி விடுவதாக நக்கீரன் கோபால் மீது கவர்னர் மாளிகை புகார் அளித்ததின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். #NakkeeranGopal
    சென்னை:

    நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால். இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார்.

    அப்போது சென்னை போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். விமான நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    பின்னர் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பல்கலை கழக பேராசிரியர்களின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.


    இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து நக்கீரன் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. அதில் கவர்னர் மாளிகையை தொடர்புப்படுத்தி எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி கவர்னர் மாளிகை சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாகவே நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐஸ் அவுஸ் ஜானிஜான்கான் தெருவில் நக்கீரன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையத்தில் நக்கீரன் கோபால் மீது 124-ஏ ஐ.பி.சி. (ராஜதுரோக குற்றம்) சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசுக்கு எதிராக வெறுப்பையும் உணர்ச்சியையும் எழுத்தால் தூண்டி விடுவதாக நக்கீரன் கோபால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் தரப்பில் வெளிப்படையாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.#NakkeeranGopal 

    Next Story
    ×