search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் - அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் தங்கமணி அறிவுரை
    X

    பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் - அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் தங்கமணி அறிவுரை

    பொதுமக்கள் அளிக்கும் மனு மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டு உள்ளார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பாலசந்திரன் ஆகியோர் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம், தற்போதைய நிலை, குடிநீர் வினியோகம்் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.

    இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது:-

    தமிழக அரசு குடிநீர் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்்து வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் நீர் ஆதாரங்கள் இருக்கக்கூடிய இடங்களை கண்டறிந்து, அவற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கிட வேண்டும். மேலும் அரசு அலுவலர்கள் இப்பணிக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்திட வேண்டும்.

    ஏற்கனவே பயன்படுத்தி வருகின்ற நீர் ஆதாரங்களை மேலும் செம்மைப்படுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அதிக அளவில் நீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படுகின்ற குடிநீர் அனைத்து பொதுமக்களுக்கும் சரியாக சென்று சேரும் வகையில், உரிய நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    நாமக்கல் மாவட்டத்தில் 4,89,213 குடும்பங்களுக்கு ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் 76,637 நோயாளிகளுக்கு ரூ.163.90 கோடி மதிப்பீட்டில் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. 2018 -19-ம் நிதியாண்டில் முதல்-அமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் ரூ.11.23 கோடி மதிப்பீட்டில் 535 பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது.

    2017-2018-ம் நிதியாண்டில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.29.19 கோடி மதிப்பீட்டில் 1,717 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அனைத்து அரசு அலுவலர்களும், பொதுமக்கள் அளிக்கின்ற மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களுக்கு உரிய தீர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×