search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி - திரளானோர் பங்கேற்பு
    X

    பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி - திரளானோர் பங்கேற்பு

    நவரத்திரி விழாவுக்காக கன்னியாகுமரி கோவில் சிலைகள், கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் நிகழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனையில் இன்று நடந்தது. #Navratri
    நாகர்கோவில்:

    திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவில் குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலைகள் பங்கேற்பது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி நேற்று இரவில் பத்மநாபபுரம் வந்தடைந்தது. இதேபோல குமார கோவில் முருகன் சிலையும் பத்மநாபபுரம் வந்து சேர்ந்தது.

    இன்று காலை சாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்தது.

    முன்னுதித்த நங்கை அம்மன், குமார கோவில் முருகன் பூப்பல்லக்கிலும், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் யானை மீதும் எழுந்தருளினர். தொடர்ந்து சாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் வாணவேடிக்கைகள், செண்டை மேளம் முழங்க 3 சிலைகளும் ஊர்வலமாக திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டன.

    சாமி சிலைகளுக்கு தமிழக மற்றும் கேரள போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை அளித்தனர். முன்னதாக பத்மநாபபுரம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வரும் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி நடந்தது.

    அரண்மனை கண்காணிப்பாளர் அஜிதகுமார், தொல்பொருள் இயக்குனர் ரெஜிகுமார் ஆகியோர் உடைவாளை எடுத்து கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், தொல்லியல் துறை மந்திரி கடனப்பள்ளி ராமச்சந்திரன், ஆகியோரிடம் கொடுத்தனர்.

    அவர்கள் உடை வாளை குமரி மாவட்ட தேவசம்போர்டு ஆணையர் அன்புமணியிடம் ஒப்படைத்தனர். அதனை அவர் பணியாளர் மோகனகுமாரிடம் கொடுத்தார்.

    மோகனகுமார் உடைவாளை சாமி சிலைகள் ஊர்வலத்தின் முன்பு ஏந்தியபடி புறப்பட்டுச் சென்றார். சாமி சிலைகள் ஊர்வலத்துக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். பெண்கள் திருக்கண் சாத்தி வழிபட்டனர்.

    தக்கலையில் புறப்பட்ட ஊர்வலம் கேரளபுரம், அழகியமண்டபம் வழியாக செல்லும் சாமி சிலைகள் இன்று இரவு குழித்துறை மகாதேவர் கோவிலில் தங்குகின்றன. நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு செல்கின்றன.

    பத்மநாபபுரம் அரண்மனையில் இன்று நடந்த விழாவில் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கேரள மாநிலம் பாறசாலை எம்.எல்.ஏ. ஹரீந்திரன், கோவளம் எம்.எல்.ஏ. சுரேந்திரன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×