search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மத்திய மாவட்ட பா.ம.க. சார்பில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அக்னி சுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் பரசுராமர் வரவேற்று பேசினார்.

    இதில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் சுப.குமார் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ள அரசு பெட்ரோல், டீசலை ஏன் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவில்லை. இதில் மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு, தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    இதில், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் கணேசன், உழவர் பேரியக்க மாநில துணைத் தலைவர் சிவக்குமார், சட்ட பாதுகாப்பு தலைவர் இளங்கோ, மாவட்ட பொருளாளர் மாதேஸ்வரி, மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறுபான்மை மாவட்ட செயலாளர் ஜார்ஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பயாஸ் அகமது வரவேற்றார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட இளைஞரணி சோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. மாநில அமைப்பு செயலாளர் மாதேஸ்வரன், பசுமைதாயக மேற்கு மாவட்ட தலைவர் துரைசாமி மற்றும் நிர்வாகிகள் விஜயகுமார், முருகன் சங்கீதா, உஷா, ரஞ்சிதா மேரி, ராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், பால்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இதில் கட்சி, நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். #tamilnews
    Next Story
    ×