search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவது உறுதி: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி
    X

    மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவது உறுதி: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

    மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவது உறுதி என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார். #AIIMS #AIIMSinMadurai #Vijayabaskar
    சென்னை :

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பிய ஒருவருக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவது தொடர்பாக சில அதிகாரப்பூர்வமான விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன். கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், கடந்த 1-ந் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதின் தற்போதைய நிலை என்ன? என்று மத்திய அரசிடம் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார். அதற்கான விளக்கம் 4-ந் தேதி அனுப்பிவைக்கப்பட்டது.

    அதில், பிரதம மந்திரியின் சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் இயக்குனர் சஞ்சய் ராய் இந்த அதிகாரப்பூர்வ தகவலை இ-மெயில் மூலம் அனுப்பி இருந்தார்.

    மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி குறித்து பெறப்பட்ட தகவல் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க 5 இடங்கள் தேர்வு செய்து கொடுக்கப்பட்டு, மதுரை தோப்பூரை தேர்வு செய்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.



    அதில் எந்த மாற்றமும் இல்லை. எந்த மாறுதலும் இல்லை. எந்த தடையும் இல்லை. விதிமுறைப்படி அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது விரிவான திட்ட அறிக்கை தயாராகிவிட்டது என்பதை தெரிவித்து இருக்கிறார்கள்.

    மத்திய அரசின் துணை நிறுவனமான ‘ஹையிட்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு அந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, மண் பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.15 கோடி நிதி அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மண் பரிசோதனை பணிகள் முடிந்து இப்போது விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டுவிட்டது. முதற்கட்டமாக ரூ.1,264 கோடி உத்தேசமாக செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி நிதித்துறைக்கு அனுப்பி மத்திய மந்திரி சபை ஒப்புதலுக்கு அனுப்புவார்கள்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், அதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, பணிகளில் சுணக்கமோ, தாமதமோ, தடையோ இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக ஒதுக்கப்பட்ட 200 ஏக்கர் நிலம் தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு சொந்தமான இடமாகும். ஒரு ஏக்கர் நிலம் கூட தனியாருக்கு சொந்தமானது கிடையாது. அதனால், நிலம் சம்பந்தமான எந்த பிரச்சினையும் இல்லை.

    எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க விரைவில் மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளிக்க வேண்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 8-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க இருக்கிறார். நானும், சுகாதாரத்துறை செயலாளரும் 9-ந் தேதி மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவதில் எந்தவித சுணக்கமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். #AIIMS #AIIMSinMadurai #Vijayabaskar
    Next Story
    ×