search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.
    X
    சென்னையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

    5 மாநில தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

    5 மாநில தேர்தலுக்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். #PetrolDieselPrice #AnbumaniRamadoss
    சென்னை :

    பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடந்தது.

    இதில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தின் போது டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 15 மாதங்களில் பெட்ரோல் விலை 32 சதவீதமும், டீசல் விலை 38 சதவீதமும் அதிகரித்துள்ளது. இவ்வாறு எந்த நாட்டிலும் அதிகரிக்கவில்லை. கச்சா எண்ணெய் விலை குறைந்தும், மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்கவில்லை.

    நமது அண்டை நாடான பாகிஸ்தான் ரூ.51-க்கும், பர்மா ரூ.44-க்கும், பூட்டான் ரூ.57-க்கும் விற்பனை செய்கின்றன. பூட்டானுக்கும், இந்தியாவுக்கும் ஒரே நிறுவனம் தான் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்கிறது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல் அதிக விலையில் விற்பனை செய்கிறது.

    பெட்ரோல் மற்றும் டீசலின் இந்த விலை உயர்வால் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் ரூ.12 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மதுவுக்கு 82 சதவீதமும், புகையிலைக்கு 28 சதவீதமும் வரி விதிக்கும் அரசு, பெட்ரோலுக்கு 118 சதவீதம் விதிக்கின்றது.

    ஜி.எஸ்.டி. வரிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கொண்டுவந்தால், 28 சதவீதத்துக்கு மேல் வரி விதிக்க முடியாது. இதனால் பெட்ரோல் விலை மிக அதிக அளவில் குறைய வாய்ப்பு உள்ளது. நேற்று முன்தினம் பெட்ரோல் விலையில் ரூ.2.50 மத்திய அரசு குறைத்துள்ளது. இதில் மத்திய அரசு வரியில் ரூ.1.50, எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1 குறைத்துள்ளன.

    5 மாநில சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் தான் மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைத்துள்ளது. கர்நாடக தேர்தலின் போது அங்கு பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யவில்லை. ஆனால் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் பெட்ரோல் விலையை உயர்த்தியது.

    பெட்ரோலுக்கு ரூ.45 வரி விதிப்பதில், ரூ.30 மாநில அரசுக்கும், ரூ.15 மத்திய அரசுக்கும் செல்கிறது. இதில் மாநில அரசு ரூ.20-ம், மத்திய அரசு ரூ.5 குறைத்து பெட்ரோலை விற்பனை செய்ய வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் பா.ம.க. மீண்டும் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PetrolDieselPrice #AnbumaniRamadoss
    Next Story
    ×