search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணப்பாறை அருகே 10-ம் வகுப்பு மாணவனை கடத்தி கிணற்றில் வீசிச்சென்ற கும்பல்
    X

    மணப்பாறை அருகே 10-ம் வகுப்பு மாணவனை கடத்தி கிணற்றில் வீசிச்சென்ற கும்பல்

    மணப்பாறை அருகே நள்ளிரவில் 10-ம் வகுப்பு மாணவனை கடத்தி கிணற்றில் வீசிச்சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் கார்த்தி (வயது 15). அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்ற அவன், இரவு அங்கு நண்பர்களுடன் சாலையோரம் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக ஒரு காரில் சிலர் வந்தனர்.

    திடீரென காரை நிறுத்திய அவர்கள், கார்த்தியை அழைத்து, ஒரு முகவரியை கூறி அங்கு எந்த வழியாக செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளனர். கார்த்தி, எப்படி செல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கும் போது, ஆட்கள் நடமாட்டம் இல்லாததை பார்த்து, காரில் வந்தவர்கள், கார்த்தியின் முகத்தை கைக்குட்டையால் பொத்தியுள்ளனர்.

    அதன் பின்னர் அவன் மயக்கமடையவே, அவனை யாருக்கும் தெரியாமல் காருக்குள் தூக்கிப்போட்டு கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

    இதனிடையே இரவு ஆகியும் கார்த்தி வீடு திரும்பாததையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவன் எங்கு சென்றான் என்று பல்வேறு இடங்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே கருங்குளம் பகுதியில் உள்ள 45 அடி ஆழ கிணற்றில் இருந்து சிறுவனின் சத்தம் கேட்டது.

    அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனே அங்கு சென்று பார்வையிட்ட போது அங்கு சிறுவன் ஒருவன் 5 அடி தேங்கியிருந்த தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இதையடுத்து வையம்பட்டி போலீசார் மற்றும் மணப்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு மூலம் கிணற்றுக்குள் இருந்து சிறுவனை மீட்டனர்.

    பின்னர் போலீசார் விசாரிக் கும் போது அந்த சிறுவன் மாயமான கார்த்தி என்பது தெரியவந்தது. இதையறிந்து சம்பவ இடத்திற்கு அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்றனர். நல்ல வேளையாக பொதுமக்கள் பார்த்து சொன்னதால் கார்த்தியை காப்பாற்ற முடிந்தது. இல்லையென்றால் இரவு முழுவதும் அவன் கிணற்றுக்குள்ளேயே கிடந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியிருக்கும்.

    தொடர்ந்து கார்த்தியிடம் விசாரிக்கும் போது, காரில் வந்தவர்கள் தனது முகத்தை கர்ச்சிப்பால் மூடியதும் மயக்க மடைந்ததாகவும், அதன்பிறகு தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும், கிணற்றுக்குள் கிடந்ததாகவும் தெரிவித்தான்.

    காரில் வந்த கும்பல் கார்த்தியை மயக்கமடைய செய்து கடத்தி சென்றதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அந்த கும்பல் குழந்தைகள் கடத்தலை சேர்ந்தவர்களாக இருக்கலாமா? அல்லது ஏதாவது முன்விரோதம் காரணமாக? கடத்தி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நரபலி கொடுப்பதற்காக சிறுவனை காரில் கடத்தி சென்ற நிலையில், அவன் மயக்கம் தெளிந்து சத்தம் போடவே, பொதுமக்களுக்கு பயந்து கிணற்றுக்குள் வீசிச் சென்றனரா? என்றும் விசாரணை நடத்தி கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. #tamilnews
    Next Story
    ×