search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டிவனத்தில் ராமதாஸ் ஆர்ப்பாட்டம்
    X

    பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டிவனத்தில் ராமதாஸ் ஆர்ப்பாட்டம்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய-மாநில அரசை கண்டித்து ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #PMK #Ramadoss #FuelPrice #BJP
    திண்டிவனம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய-மாநில அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி திடலில் பா.ம.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ரமேஷ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை 118 சதவீதம் உயர்ந்து விட்டது. தினமும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணை உற்பத்தியாளர்கள் நிர்ணயித்து கொள்ளலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்ததே இதற்கு காரணம்.

    2014-16-ம் ஆண்டில் உலகளவில் கச்சா எண்ணை விலை குறைவாகத்தான் இருந்தது. அப்போதாவது பெட்ரோல், டீசல் விலையை குறைத்து இருக்கலாம். மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஒவ்வொரு முறையும் பெட்ரோல், டீசல் விலை குறையும் என கூறுகிறார். ஆனால், இதுவரை குறையவில்லை.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் வரும் காரணத்தினால் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.


    பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அதிகமாக கொள்ளையடிப்பது தமிழக அரசுதான். கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விற்பனையில் தமிழக அரசுக்கு ரூ.470 கோடியில் இருந்து ரூ.900 கோடி வரை கிடைத்திருந்தது. இந்த ஆண்டு ரூ.4 ஆயிரம் கோடி கிடைக்கும். மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைத்து பொதுமக்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நகர தலைவர் குமார் நன்றி கூறினார். #PMK #Ramadoss #FuelPrice #BJP
    Next Story
    ×