search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கலெக்டர் மரியாதை
    X

    ஊட்டியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கலெக்டர் மரியாதை

    ஊட்டியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மரியாதை செலுத்தினார்.
    ஊட்டி:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பு பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து காதி அங்காடியில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கதர் ஆடைகள் மற்றும் பட்டு சேலைகளுக்கு சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் மக்கள் ஆரம்ப காலத்தில் கதர் ஆடைகள், போர்வைகள், துணிகளை அதிகமாக பயன்படுத்தி வந்தனர். தற்போதும் கிராமப்பகுதிகளில் கதர் ஆடைகள் பயன்பாடு இருந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 2018-2019-ம் ஆண்டிற்கு ரூ.72 லட்சம் மதிப்பிற்கு கதர் ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இன்று (நேற்று) முதல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை செய்யப்படுகிறது. கதர், பட்டு, பாலியஸ்டர் துணி ரகங்களுக்கு 30 சதவீதம், வெப்ப ஆடையாக பயன்படுத்தப்படும் உல்லன் துணிகளுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

    தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளிகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அலுவலக பகுதிகளில் தற்காலிகமாக கதர் ஆடைகளை விற்பனை செய்ய விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே, அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள், தோட்ட உரிமையாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கதர் ஆடைகளை பயன்படுத்துவதன் மூலம் கிராம கதர் தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களை மேம்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், காதி அங்காடி உதவி மேலாளர் கனகலதா, மத நல்லிணக்க அமைதிக்குழு தலைவர் கிருஷ்ணன், செயலாளர் முகமது அலி மற்றும் பலர் கலந்துகொண்டனர். 
    Next Story
    ×