search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் கால்நடை கணக்கெடுப்பு பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    திருப்பூரில் கால்நடை கணக்கெடுப்பு பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

    திருப்பூரில் கால்நடை கணக்கெடுப்பு பணியை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 20-வது கால்நடை கணக்கெடுப்பு பணியினை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 2-வது தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணி இன்று (நேற்று) முதல் வருகிற 31-12-2018 வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்புகளில் கால்நடை மருத்துவ பட்டதாரிகள், கால்நடை ஆய்வாளர்கள், பணி ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவ பட்டதாரிகள், கால்நடை ஆய்வாளர்கள், இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள், தனியார் செயற்கை முறை கருவூட்டாளர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் மொத்த வீடுகள் 6 லட்சத்து 91 ஆயிரத்து 810. இதில் ஊரகப்பகுதிகளில் 3 லட்சத்து 33 ஆயிரத்து 549 மற்றும் நகர்புறங்களில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 261 என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு கணக்கெடுப்பாளருக்கு கிராமப்பகுதிகளில் 4 ஆயிரத்து 500 குடியிருப்புகள் எனவும், நகரப்பகுதிகளில் 6 ஆயிரம் குடியிருப்புகள் எனவும் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 கணக்கெடுப்பாளருக்கு ஒரு மேற்பார்வையாளர்கள் எனவும், 8 மேற்பார்வையாளருக்கு ஒரு தணிக்கையாளர் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதில் 147 கணக்கெடுப்பாளர்கள், 30 மேற்பார்வையாளர்கள் மற்றும் 4 தணிக்கையாளர்கள் நிர்ணயிக்கப்பட்டு கால்நடை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்களது கால் நடைகள் விவரத்தினை கணக்கெடுப்பாளர்களுக்கு விடுபாடின்றி தெரிவித்திட வேண்டும்.

    இந்த கணக்கெடுப்பின்படி கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள், தடுப்பூசிகள், அரசு நலத்திட்டங்கள் போன்றவை வழங்கப்பட உள்ளது. இதுதவிர இந்த கணக்கெடுப்பின் போது கால்நடை உபகரணங்கள் மற்றும் மீன்வளர்ப்பு விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள், பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாதனைக்குறள், உதவி இயக்குனர்கள் அன்வர்தீன், முருகேசன் மற்றும் டாக்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    Next Story
    ×