search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடலூர் அருகே ஆசிரியை வீட்டில் நகை- பொருட்கள் கொள்ளை
    X

    வடலூர் அருகே ஆசிரியை வீட்டில் நகை- பொருட்கள் கொள்ளை

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள தென்குத்து பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி அமுதா (வயது 50). இவர் தம்பிபேட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு வினோத்குமார் என்ற மகன் உள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமார் இறந்து விட்டார். இதனால் அமுதா தனது மகன் வினோத்குமாருடன் தென்குத்து பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் வினோத்குமார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையொட்டி தென்குத்தில் உள்ள தனது வீட்டை பூட்டி விட்டு அமுதா புதுவைக்கு சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நேற்று இரவு அமுதாவின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கடப்பாரையால் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர். மேலும் வீட்டின் மற்றொரு அறையில் இருந்த லேப்-டாப், கேமரா ஆகியவற்றையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போன நகை மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    நேற்று இரவு அமுதா புதுவையில் இருந்து தென்குத்துக்கு வந்தார். வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்களெல்லாம் சிதறி கிடந்தன.

    வீட்டுக்குள் கத்தி, கடப்பாரை போன்ற பயங்கர ஆயுதங்கள் கிடந்தது. மர்ம மனிதர்கள் வீட்டில் உள்ள நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து வடலூர் போலீசில் அமுதா புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் விட்டு சென்ற கத்தி, கடப்பாரை போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

    ஆசிரியை வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    Next Story
    ×