search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண்எண்ணை கேனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிக்க வந்த தம்பதி
    X

    மண்எண்ணை கேனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிக்க வந்த தம்பதி

    விழுப்புரத்தில் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்காததை கண்டித்து மண்எண்ணை கேனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிக்க வந்த தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக கலெக்டரிடம் கொடுத்தனர்.

    செஞ்சி அருகே உள்ள அடகுணம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 51), விவசாயி. இவரது மனைவி திலகவதி. இவர்கள் 2 பேரும் இன்று காலை விழுப்புரம் கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் வழியாக சென்ற போது அவர்களை போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது அவர்கள் வைத்திருந்த துணி பையில் மண்எண்ணை கேன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து முருகன் மற்றும் அவரது மனைவி திலகவதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கணவன், மனைவி 2 பேரும் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக மண்எண்ணை கேனை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த மண்எண்ணை கேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் வைத்திருந்த மனுவை போலீசார் கைப்பற்றினர்.

    அடகுணம் கிராமத்தில் எங்களது விவசாய நிலத்தில் சொந்தமாக ஒரு வீடு கட்டினோம். அந்த வீட்டுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக விண்ணப்பித்திருந்தோம். ஆனால் இதுவரை மின் இணைப்பு கொடுக்கவில்லை.

    இதுகுறித்து அன்னியூரில் உள்ள இளநிலை மின்வாரிய அலுவலகத்தில் கேட்டும் எந்த பயனும் இல்லை. எனவே உடனடியாக மின் இணைப்பு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் மண் எண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொள்வோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதையடுத்து முருகன் மற்றும் அவரது மனைவி திலகவதியை விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    Next Story
    ×