search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயானத்திற்கு பாதை இல்லாததால் பிணத்தை வயல்கள் வழியாக தூக்கி செல்லும் மக்கள்
    X

    மயானத்திற்கு பாதை இல்லாததால் பிணத்தை வயல்கள் வழியாக தூக்கி செல்லும் மக்கள்

    திருவாரூர் மாவட்டம் ஆப்பரக்குடி கிராமத்தில் மயானத்திற்கு பாதை இல்லாததால் பிணத்தை வயல்கள் வழியாக தூக்கி செல்லும் மக்கள் பெருந்துன்பப்பட்டு வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் ஆப்பரக்குடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கான மயானமானது ஆப்பரக்குடியில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக வயல் வெளிகளுக்கு நடுவே உள்ளது .

    இந்த நிலையில் ஊரில் யாரேனும் உயிரிழந்தால் அப்பகுதி மக்கள் இறந்தவர்களை நினைத்து துயர படுகிறார்களோ இல்லையோ இந்த சடலத்தை மயானத்துக்கு தூக்கிச் செல்ல நாம் என்ன பாடுபட வேண்டும் என்ற கவலை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு பயணத்துக்கான பாதை இல்லாமல் ஆப்பரக்குடி குடிமக்கள் பெருந்துன்பப்பட்டு வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால் அவரது பிரேதத்தை வயல் வழியாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துச் செல்கின்றனர் அப்பொழுது பிரேதம் பலமுறை வயலில் விழுந்தும் அல்லது வயல்களுக்கு நடுவில் உள்ள வாய்க்காலில் விழுந்தும் பல சிரமங்களை தாண்டி தான் மயானத்துக்கு செல்ல வேண்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    நேற்று அப்பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடலை தூக்கி கொண்டு சென்ற இறுதி ஊர்வலமானது விவசாயிகளும் , விவசாய தொழிலாளர்களும் பாடுபட்டு வளர்த்த சம்பா பயிரின் நடுவே சென்றது. பிணத்தை தூக்கி சென்ற பலரும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் என்பதால் இறந்த அய்யனாருக்காக வருந்துவதா? அல்லது தாங்கள் வளர்த்த பயிர்கள் தங்கள் காலிலேயே மிதிபடு வதைக் கண்டு வருந்துவதா? என்று வேதனைப்பட்டு கொண்டே விளைநிலங்களில் இறங்கி மயானத்துக்கு சென்றனர்.

    இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர் . உடனடியாக மயானத்துக்கு செல்வதற்கு உரிய பாதை அமைத்து தர வேண்டும் என்பது உயிரோடு உள்ள எங்களின் கோரிக்கை மாத்திரமல்ல , இடுகாட்டை நோக்கிப் பயணிக்கும் பல ஆத்மாக்களின் கோரிக்கை என்கின்றனர், ஆப்பரக்குடி பொதுமக்கள்.

    Next Story
    ×