search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை எய்ம்ஸ் மத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது- ப.சிதம்பரம்
    X

    மதுரை எய்ம்ஸ் மத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது- ப.சிதம்பரம்

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். #PChidambaram #AIIMS #MaduraiAIIMS
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்று நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-

    மாவட்டம்தோறும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 20-ந்தேதி காளையார்கோவிலில் நடக்கிறது.

    செயல் வீரர்களின் கூட்டங்களில் தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. அந்த குழுவின் தலைவராக நான் உள்ளேன்.

    தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொதுமக்களின் கருத்துக்களை பதிவு செய்ய தனியாக வலைதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்திய அரசிற்கு தேவையான 126 போர் விமானங்கள் வாங்குவதற்கு காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை தற்போதைய அரசு ரத்து செய்துள்ளது. ஆனால் 36 ரபேல் விமானங்கள் வாங்க பா.ஜனதா அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

    கடந்த ஆட்சியில் முடிவு செய்யப்பட்ட விலையை காட்டிலும் 9 சதவீதம் குறைவான விலைக்கு ரபேல் விமானங்களை வாங்குவதாக பா.ஜனதா அறிவித்தது. விலை குறைவு என்றால் அதனை கூறுங்கள் என்று கேட்டால் தெரிவிக்க மறுக்கிறார்கள். மேலும் குறைவான விலைக்கு விமானங்கள் வாங்குவது என்றால் அதிக விமானங்களை வாங்க வேண்டியதுதானே? ஏன் குறைத்து வாங்குகிறீர்கள்?.

    ராணுவ அமைச்சகம் பற்றி அதன் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதுவும் தெரியவில்லை. பா.ஜனதாவின் 4 ஆண்டு கால ஆட்சியில் 3 பேர் ராணுவ அமைச்சராக மாற்றப்பட்டுள்ளனர். யாரும் உருப்படியான எந்த காரியத்தையும் செய்யவில்லை. இந்த அரசு அடக்கு முறை கொள்கையை கையாண்டு வருகிறது.

    தொடர்ச்சியாக அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் சரிந்து வருவது பொருளாதார வீழச்சிக்கு வழிவகுக்கும். இதுபற்றி நான் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறேன்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கலாம். குற்றவாளிகள் நிற்க முடியாது என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை வரவேற்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கக்கூடாது என்ற நிலை வந்தால் தற்போதைய பா.ஜனதா அரசு அனைத்து காங்கிரஸ் தலைவர்கள் மீதும் குற்றத்தை சுமத்தி இருக்கும்.


    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தேர்தல் கமி‌ஷனால் தடுக்க முடியாதது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது.

    இந்தியாவில் வாக்குச் சீட்டு முறை தேர்தல் தான் தேவை என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் மறுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PChidambaram #AIIMS #MaduraiAIIMS
    Next Story
    ×