search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமுருகன் காந்திக்கு சிறையில் சித்ரவதை - மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்
    X

    திருமுருகன் காந்திக்கு சிறையில் சித்ரவதை - மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

    சிறையில் இருக்கும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியிடம் கொடூரமான முறையில் நடந்துவரும் காவல்துறைக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பற்றி ஐ.நா. சபையில் பேசியதற்காக, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல பொய் வழக்குகளைப் பதிவு செய்து தமிழக அரசு சிறையில் அடைத்துள்ளது.

    திருமுருகன் காந்தியை சிறையில் அடைத்தது முதல் இன்று வரை தமிழக காவல்துறையும், சிறைத்துறையும் அவரை மிகவும் கொடூரமான முறையில் நடத்தி வருகிறது. சிறையில் பாம்புகள், புழுப் பூச்சிகள் நிறைந்த பாழடைந்த தனியறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவர் அந்த அறையை விட்டால், வேறெங்கும் செல்லவோ, யாருடனும் பேசவோ அனுமதிக்கப்படுவதில்லை. அவருக்குச் சுகாதாரமான உணவு வழங்கப்படவில்லை, இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் மருத்துவ சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

    மருத்துவமனையில் குறைந்தது இரண்டு நாட்களாவது உள்நோயாளியாக சிகிச்சைப் பெறவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய பின்பும், அதற்கு அனுமதியளிக்க முடியாது எனக் காவல்துறை மறுத்துள்ளது அப்பட்டமான மனிதஉரிமை மீறிய செயலாகும். காவல் துறையின் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

    திருமுருகன் காந்தி உடல்நிலை இருக்கும் நிலையில் சிகிச்சை அளிக்காமல் தன்னால் அனுப்ப இயலாது என்று மருத்துவர் தெரிவித்த பின்பு தற்போது அடுக்கம்பாறை மருத்துவமனையின் ஐ.எம்.சி.யூ. எனும் வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திருமுருகன் காந்தியை உடல் ரீதியாகப் பலவீனமாக்கி அவரது குரல்வலையை நெரித்துவிடலாம் என்று கனவு கண்டால் அது வெறும் பகல் கனவாகவே இருக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகளுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×