search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடிபாடுகள் நடுவே பொதுமக்கள் சிரமத்துடன் நடந்து செல்லும் காட்சி
    X
    இடிபாடுகள் நடுவே பொதுமக்கள் சிரமத்துடன் நடந்து செல்லும் காட்சி

    இடிபாடுகளை அகற்றாததால் மெட்ரோ ரெயில் அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

    தேரடியில் இடிபாடுகளை அகற்றாததால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று மெட்ரோ ரெயில் அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திருவொற்றியூர்:

    வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது.

    இதற்காக தேரடியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் ஆர்ஜிதம் செய்யப்பட்டு கடந்த 18-ந்தேதி ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டன.

    ஆனால் இடிபாடுகளான செங்கல் மற்றும் ஜல்லி துகள்களை அப்புறப்படுத்தாமல் உள்ளன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். மேலும் தூசிகள் பறந்து வீடுகளில் சூழ்ந்து விடுகிறது.

    இதனால் வீடுகளில் இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரவு நேரங்களில் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த செங்கல் துகள்கள் உள்ளிட்ட கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தேரடி சந்திப்பில் இன்று காலை அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×