search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலைய 4-வது முனையம் அடுத்த மாதம் திறப்பு
    X

    சென்னை விமான நிலைய 4-வது முனையம் அடுத்த மாதம் திறப்பு

    சென்னை விமான நிலையத்தில் 4-வது முனையம் அடுத்த மாத இறுதியில் திறக்கப்படும் என்று விமான நிலைய இயக்குனர் கூறினார். #ChennaiAirport #Terminal
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் ‘இன்டிகோ’ விமான நிறுவனம் தினமும் 100 விமானங்களை இயக்கிவருகிறது. இதற்காக விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களை சேர்ந்தவர்கள் நேற்று கவுரவிக்கப்பட்டனர்.

    அப்போது விமான நிலையத்தில் நடந்துவரும் மேம்பாட்டு பணிகள் குறித்து சென்னை விமான நிலைய இயக்குனர் ஜி.சந்திரமவுலி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை விமான நிலையத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அடிப்படை பணிகள் நடந்துவருகிறது. தற்போது 3 பன்னாட்டு முனையங்கள் உள்ளது. 4-வது முனையம் கட்டப்பட்டு உள்ளது. அடுத்த மாத இறுதியில் இந்த முனையம் திறக்கப்படும்.



    விமான நிலையத்தில் ரூ.2,500 கோடி மதிப்பில் 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் 42 மாதங்களில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். தற்போது விமானங்கள் நிறுத்தும் இடத்தில் 86 விமானங்களை நிறுத்த வசதி உள்ளது. விரிவாக்கத்துக்கு பிறகு இங்கு 126 விமானங்களை நிறுத்தமுடியும்.

    பிரதான ஓடுபாதையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிக்காக ஓடுபாதை தினமும் பகல் 12 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மூடப்படுகிறது. இந்த பணி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும். 2015-ம் ஆண்டு பெய்த மழையால் ஏற்பட்ட அனுபவத்தால், இனி இந்த பாதிப்பு ஏற்படாதவாறு சென்னை ஐ.ஐ.டி.யிடம் ஆலோசனைகள் பெறப்பட்டு பணிகள் நடந்துவருகிறது.

    விரிவாக்கத்துக்கு நிலம் தேவையில்லை. ஆனால் பாதுகாப்பு பணிகளுக்காக நிலம் தேவைப்படுகிறது. இதற்காக 15 ஏக்கர் நிலம் மாநில அரசிடம் கேட்டுள்ளோம். அதேபோல் முனையம் அருகில் உள்ள எரிபொருள் நிரப்பும் மையத்தையும் மாற்றி நவீன முறையில் அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

    2013-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை இங்கு 29 கண்ணாடிகள் உடைந்து உள்ளன. புதிய விமான நிலையத்தில் கண்ணாடிகள் ‘லேமினேஷன்’ செய்யப்பட்டு, நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்படுகிறது. இதனால் கண்ணாடிகள் உடையாது, உடைந்தாலும் அவை கீழே விழுவதற்கு வாய்ப்பு இல்லை.

    செய்யூரில் எந்த இடத்தில் விமான நிலையம் அமைப்பது என்பது குறித்து மாநில அரசிடம் பேசி வருகிறோம். விரிவாக்கத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடமும் கட்டப்பட்டு வருகிறது. இதில் 2 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வசதி கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது இந்திய விமான நிலைய ஆணைய குழு இயக்குனர் (நிதி) சுரேஷ் மற்றும் விமான நிலைய அதிகாரி ஸ்ரீகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.  #ChennaiAirport #Terminal 
    Next Story
    ×