search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழலில், போலீஸ் அதிகாரிகளும் கைதாகிறார்கள் - சி.பி.ஐ. மீண்டும் அதிரடி விசாரணை
    X

    குட்கா ஊழலில், போலீஸ் அதிகாரிகளும் கைதாகிறார்கள் - சி.பி.ஐ. மீண்டும் அதிரடி விசாரணை

    குட்கா ஊழல் தொடர்பாக மாதவராவ் உள்பட 6 பேர் சிக்கி உள்ள நிலையில் சி.பி.ஐ. மீண்டும் அதிரடி விசாரணை நடத்தி வருவதால் போலீஸ் அதிகாரிகளும் கைது ஆகலாம் என தெரிகிறது. #GutkhaScam #CBI

    சென்னை:

    குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள், குட்கா வியாபாரி மாதவராவ் உள்பட 6 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.

    செங்குன்றம் அருகே உள்ள குட்கா குடோன் உரிமையாளரான மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, மத்திய கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரியான செந்தில் முருகன் ஆகியோர் கடந்த 6-ந்தேதி கைதானார்கள். இவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினர்.

    செங்குன்றம் குட்கா குடோனில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இதில் குட்கா தயாரிக்க பயன் படுத்தப்பட்ட எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளான டி,ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், மற்றும் உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இவர்களில் மன்னர்மன்னன் சம்பத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் சம்பத் மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இதோடு குட்கா விவகாரம் முடிவுக்கு வந்து விட்டதாகவே கூறப்பட்டது.

    இந்த நிலையில் குட்கா வழக்கில் சி.பி.ஐ. தனது அடுத்த அதிரடியை தொடங்கியுள்ளது. உணவு பாதுகாப்பு துறையில் திருவள்ளூர் மாவட்ட ஆய்வாளராக இருக்கும் சிவக்குமார், நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். குட்கா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் இவர்தான் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    ஆனால் அதனை ஏற்க கோர்ட்டு மறுத்திருந்தது. இந்த நிலையில்தான் அதிகாரி சிவகுமாரை சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்த சி.பி.ஐ. அதிகாரிகள் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து குட்கா வழக்கில் போலீஸ் அதிகாரிகளையும் கைது செய்ய சி.பி.ஐ. மீண்டும் வேகம் காட்டுவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

    குட்கா ஊழலை பொறுத்தவரையில் குடோன் உரிமையாளரான மாதவ ராவ் மற்றும் அவரது கூட்டாளிகள், இருவருடன் அரசு அதிகாரிகள் 3 பேரும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் இதுவரையில் யார் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகளின் அடுத்த குறி போலீஸ் அதிகாரிகள்தான் என்றும், விரைவில் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குட்கா விவகாரத்தில் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னனிடம் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை.

    எனவே விரைவில் அவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதன் பின்னரே குட்கா ஊழலில் போலீஸ் அதிகாரிகளுடனான தொடர்பு பற்றி இறுதியாக தெரிய வரும் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் நம்புகிறார்கள். உதவி ஆணையரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் குட்கா ஊழலில் போலீஸ் அதிகாரிகளும் அடுத்தடுத்து கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. #GutkhaScam #CBI

    Next Story
    ×