search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜர்- ஜாமீன் மனு மீது விசாரணை
    X

    எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜர்- ஜாமீன் மனு மீது விசாரணை

    முதமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரியை மிரட்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட கருணாஸ் எம்எல்ஏ இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். #Karunas #HighCourt
    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் காமெடி நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த 16-ந்தேதி நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையில் பேசிய கருணாஸ், நாடார் சமுதாயத்தினர் பற்றியும் பிரிவினையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

    இதனை தொடர்ந்து கடந்த 20-ந்தேதி கருணாஸ் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து கருணாஸ் தப்பி ஓடியதாக தகவல் பரவியது. ஆனால் அவரோ தனது வீட்டில் வைத்து ஹாயாக பேட்டி அளித்தார். நான் எங்கும் ஓடவில்லை. தப்பி ஓடிவிட்டதாக போலீஸ் அவதூறு பரப்புகிறது என்று சாடினார்.

    இதையடுத்து கருணாசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. கருணாசின் பேச்சுக்கள் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் இருந்த போதிலும் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவது போல் காணப்பட்டதால் கடும் விமர்சனங்களும் எழுந்தன.

    இந்த நிலையில் 3 நாட்களாக அமைதி காத்த போலீசார் கடந்த 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தங்களது அதிரடியை காட்டினர். சாலிகிராமத்தில் உள்ள கருணாசின் வீட்டுக்குள் அதிகாலை 5.30 மணி அளவில் புகுந்த உதவி கமி‌ஷனர் முத்துவேல் பாண்டி தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    கருணாசின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் வகையில் அமைந்திருந்ததால் அதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். இதற்காக எழும்பூர் கோர்ட்டில் நுங்கம்பாக்கம் போலீசார் மனுதாக்கல் செய்தனர். அதில் கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினர். இதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

    அப்போது கருணாசை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது. அத்துடன் அவரது ஜாமீன் மனுவுடன், காவல்துறையின் மனுவும் விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.



    அதன்படி கருணாசை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக. வேலூர் சிறையில் இருந்து காலை 9 மணி அளவில் அவரை அழைத்துக் கொண்டு போலீசார் சென்னை புறப்பட்டனர். மதியம் 12.30 மணியளவில் கருணாசை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, கருணாசின் ஜாமீன் மனுவுடன், போலீசாரின் மனுவும் சேர்த்து விசாரிக்கப்பட்டது.

    அப்போது கருணாசை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

    முக்குலத்தோர் புலிப்படையினர் கொலை செய்யவும் தயங்கக் கூடாது. பிக்னிக் செல்வது போல ஜெயிலுக்கு சென்று வரவேண்டும். வழக்கு செலவை நான் பார்த்துக் கொள்வேன் என்று கூறினார். தினமும் மதுவுக்காக மட்டும் ரூ.1 லட்சம் செலவு செய்கிறேன் என்று கருணாஸ் கூறி இருந்தார். இது தொடர்பாக கருணாசிடம் உரிய விசாரணை நடத்தப்பட உள்ளது.

    முதல்-அமைச்சர் எடப்பாடியை மிரட்டும் வகையில் கருணாஸ் பேசியதன் பின்னணியில் யாரும் உள்ளனரா? துணை கமி‌ஷனர் அரவிந்தனை பார்த்து சட்டையை கழட்டி விட்டு என்னோடு நேருக்கு நேர் மோதுவதற்கு தயாரா? என்று கேள்வி கேட்கும் அளவுக்கு அவரோடு என்ன பிரச்சினை? என்பது பற்றியும் கருணாசிடம் விசாரணை நடைபெற உள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் திடீரென அரசியல் பிரவேசம் செய்த கருணாஸ், ஜெயலலிதாவின் தயவால், திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. கருணாசின் நடவடிக்கைகளும் தமிழக அரசுக்கு எதிராக இருந்தன. அதன் காரணமாகவே கருணாசின் பேச்சுக்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

    இதனால் கருணாசின் பேச்சின் பின்னணியில் அரசியல் சதி திட்டம் ஏதும் உள்ளதா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. யாரோ ஒருவர் கருணாசை இயக்குவதாகவும் கூறப்படுகிறது. அவர் யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்படுகிறது.

    கருணாசை காவலில் எடுத்து நடத்தப்படும் விசாரணையை வாக்கு மூலமாக பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். போலீஸ் காவலில் அவர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை தொடரவும் போலீசார் திட்டமிட் டுள்ளனர். எனவே கருணாசின் போலீஸ் காவல் முடியும் போது, அவரது பின்னணியில் செயல்படுபவர்கள் யார்-யார்? என்பது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கும் தாமோதர கிருஷ்ணனையும் போலீசார் தேடி வருகிறார்கள். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. தாமோதர கிருஷ்ணன் இருக்கும் இடம் கருணாசுக்கு எப்படியும் தெரியும் என்று போலீசார் கருதுகிறார்கள். எனவே கருணாசை வைத்து அவரை பிடிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    போலீசாரின் இது போன்ற தீவிர நடவடிக்கைகளால் கருணாஸ் ஆதரவாளர்கள் மீதான பிடி மேலும் இறுகியுள்ளது. #Karunas #HighCourt
    Next Story
    ×