search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு காங். கட்சிக்கு இளங்கோவன் மீண்டும் தலைவராக வாய்ப்பு
    X

    தமிழ்நாடு காங். கட்சிக்கு இளங்கோவன் மீண்டும் தலைவராக வாய்ப்பு

    தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் புதிதாக யாரை அமர்த்துவது பற்றி கட்சி மேலிடம் ஆலோசனை நடத்தி வரும்நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மீண்டும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. #Congress #EVKSElangovan
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. எனவே, அனைத்து மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்துவதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கவனம் செலுத்தி வருகிறார்.

    தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் இருந்து வருகிறார். தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்த புதிய தலைவர் வேண்டும் என்று கட்சி மேலிடத்தில் பலர் தெரிவித்துள்ளனர்.

    இதன் அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருநாவுக்கரசர் கட்சியின் மேலிட அழைப்பை ஏற்று டெல்லி சென்றுள்ளார்.

    நேற்று சோனியா காந்தியை, திருநாவுக்கரசர் சந்தித்து பேசியுள்ளார். கட்சி தலைவர் ராகுல் மற்றும் மேலிட தலைவர்களை அவர் சந்திக்க இருக்கிறார். அப்போது தமிழ்நாடு காங்கிரசின் தற்போதைய செயல்பாடுகள், புதிய திட்டங்கள் ஆகியவற்றை விளக்கி கூறுகிறார். தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவ ராக நீடிக்கும் முயற்சியில் திருநாவுக்கரசர் இறங்கி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

    என்றாலும், தமிழ்நாட்டிற்கு புதிய காங்கிரஸ் தலைவரை நியமிப்பதில் கட்சி மேலிடம் உறுதியாக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பல தலைவர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

    ப.சிதம்பரத்தை தமிழக காங்கிரஸ் தலைவராக்கலாம் என்று மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.


    தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் ப.சிதம்பரம் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். அகில இந்திய அளவில் பா.ஜனதாவுக்கு பதில் சொல்லும் முக்கிய இடத்திலும் உள்ளார்.

    மத்திய அரசு பற்றிய முழு விவரம் அறிந்தவர். எனவே தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ப.சிதம்பரம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

    எனவே, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ப.சிதம்பரமும் இதை ஆதரிக்க வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதுவரை நியமிக்கப்படாத புதியவர் கட்சி தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மேலிடம் விரும்பினால் பீட்டர் அல்போன்ஸ் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர வசந்தகுமாரும் இந்த போட்டியில் இருக்கிறார். என்றாலும், தற்போதைய நிலவரப்படி இளங்கோவனுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தலைவர் தவிர 3 பேர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இளங்கோவன் தலைவரானால் பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், கே.எஸ்.அழகிரி ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

    பிரசார குழு தலைவராக தங்கபாலு நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. யார் தலைவர் என்பதை கட்சி மேலிடம் இன்று மாலை முடிவு செய்கிறது. #Congress #EVKSElangovan #PChidambaram
    Next Story
    ×