search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடிக்கப்பட்ட பாலங்களை சீரமைக்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
    X

    இடிக்கப்பட்ட பாலங்களை சீரமைக்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

    பாளையம் கிராமத்தில் இடிக்கப்பட்ட பாலங்களை சீரமைக்க கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் அண்ணா நகரில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்த மனுவில், பாளையம் அண்ணா நகரில் உள்ள 3 தெருக்களில் போக்குவரத்துக்காக 3 பாலங்கள் இருந்தன.

    தற்போது கழிவுநீர் செல்வதற்காக பாலங்களை இடித்து விட்டு கால்வாய் கட்டி விட்டனர். ஆனால் இடிக்கப்பட்ட பாலங்களை சீரமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்தோ, வாகனத்திலோ செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம். மேலும் கழிவுநீர் செல்ல வசதியும், காவிரி கூட்டு குடிநீர் வசதியும் செய்து தரப்படவில்லை. இது தொடர்பாக குரும்பலூர் பேரூராட்சியின் செயல் அலுவலரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பாளையம் அண்ணா நகரில் இடிக்கப்பட்ட பாலங்களை சீரமைக்கவும், காவிரி குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பெரம்பலூர் ராணி மங்கம்மாள் அறக்கட்டளை தலைவர் புவனேந்திரன் மற்றும் அதன் நிர்வாகிகள் பெரம்பலூர் மாவட்ட மக்கள் சார்பாக கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க மோகனூர் அல்லது ஈரோட்டில் இருந்து காவிரி நீரை நாமக்கல், தா.பேட்டை, துறையூர் வழியாக பெரம்பலூர் லாடபுரம் ஏரிக்கு கொண்டு வந்தால் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும் இந்த காவிரி நீரை மருதையாற்றுடன் இணைத்தால் கொட்டரை, ஆதனூர் அணை வரை தண்ணீர் செல்லும். இதனால் பெரம்பலூர் நகர மக்களின் குடிநீர் பிரச்சினையும் முழுமையாக தீர்ந்து விடும் என்று கூறப்பட்டிருந்தது.

    குன்னம் தாலுகா ஒதியம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஒதியம் கிராமத்தில் உள்ள கத்துக்குளத்திற்கு கிராம மக்கள் செலவில் புதிதாக வெட்டிய வரத்து வாய்க்காலை ஒதியம் மெயின் ரோட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரமுள்ள வரைபட கணக்கில் அளந்து கணக்கில் சேர்க்க வேண்டும். பழைய வரத்து வாய்க்காலை சில பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பினை அகற்றி பழைய வரத்து வாய்க்காலை கிராம மக்கள் சார்பில் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பாடாலூர் அ.தி.மு.க.வினர் சார்பில் கொடுத்த மனுவில், பாடாலூர் மற்றும் இரூர் ஊராட்சி பகுதிகளில் பெரம்பலூர் மாவட்ட ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு அறிவித்திருந்தார். அதற்கான ஆயத்த பணிகள் அப்போது தொடங்கப்பட்டது. ஜவுளி பூங்கா அமையவுள்ள நிலத்தை சிப்காட் நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பஞ்சாயத்து மூலம் ஜவுளி பூங்கா இடத்திற்கு செல்லும் அணுகுசாலையும் மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.

    தற்போது அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஜவுளி பூங்காவில் தொழில் தொடங்க தொழில் முனைவோர்கள் முன்வந்துள்ளனர். இதன் மூலம் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே மாவட்ட ஜவுளி பூங்காவை விரைந்து அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் சாந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
    Next Story
    ×