search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருபுவனையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
    X

    திருபுவனையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

    திருபுவனையில் இன்று காலை மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
    திருபுவனை:

    மதகடிப்பட்டு அருகே கொத்தாம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 37). இவர் ஏரிப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை இவர் பாக்கம் கூட்டு ரோட்டை சேர்ந்த தனது உறவினர் பெண் ஜோதியம்மாள் (29) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

    திருபுவனை ஏரிக்கரை அருகே வந்த போது, இவரது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த வீராணம் கிராமத்தை சேர்ந்த குமார் (40) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஏழுமலையும், ஜோதியம்மாளும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஏழுமலை பரிதாபமாக இறந்து போனார். ஜோதியம்மாள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை நைனார் மண்டபம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அர்ச்சுணன் (வயது 75). இவர், நேற்று மதியம் தவளக்குப்பத்தில் உள்ள தனது உறவினரின் கடைக்கு சென்றுவிட்டு ஸ்கூட்டியில் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.

    சுண்ணாம்பாறு கேன்சர் சென்டர் அருகே வந்த போது எதிரே வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக அர்ச்சுணன் ஓட்டி வந்த ஸ்கூட்டி மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அர்ச்சுணன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது போல் தவளக்குப்பம்- அபிஷேகப்பாக்கம் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு 42 வயது மதிக்கத்தக்க ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயத்துடன் கிடந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து வாகனம் மோதி படுகாயம் அடைந்தவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×