search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்பு
    X

    காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்பு

    காவிரி ஆற்றில் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் இன்று பிற்பகல் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்படிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த மாதம் பலத்த மழை கொட்டியதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    சுமார் 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது.

    ஆனால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை இல்லாததால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து நீர்மட்டமும் குறையத் தொடங்கியது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்படிப்பு பகுதிகளிலும் தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்ராம் பாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

    தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியான ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் நேற்று 7 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று இது 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

    இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் சுமார் 1 அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீடிக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 5 ஆயிரத்து 462 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று இது குறைந்து 5 ஆயிரத்து 23 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்திற்கு 22 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் 105.62 அடியில் இருந்து 104.47 அடியாக குறைந்துள்ளது.

    காவிரியில் வரும் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் இன்று பிற்பகல் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தண்ணீர் வரும்பட்சத்தில் அணையின் நீர்மட்டம் உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
    Next Story
    ×