search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு கொள்முதல் மையம் அமைக்க கோரி சின்ன வெங்காய செடியுடன் வந்து கலெக்டரிடம் விவசாயிகள் மனு
    X

    அரசு கொள்முதல் மையம் அமைக்க கோரி சின்ன வெங்காய செடியுடன் வந்து கலெக்டரிடம் விவசாயிகள் மனு

    கோவையில் அரசு கொள்முதல் மையம் அமைக்க கோரி சின்ன வெங்காய செடியுடன் வந்து விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஹரிஹரன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    அவரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் விவசாயிகள் கையில் வெங்காய செடியுடன் வந்து மனு அளித்தனர்.

    கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளான தொண்டாமுத்தூர், நரசீபுரம், செம்மேடு, பூலுவப்பட்டி, நல்லூர் வயல், ஆலாந்துறை, சென்னனூர், மாதம்பட்டி, தீத்திப்பாளையம், பேரூர் ஆகிய பகுதிகளில் 500 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    சின்ன வெங்காயத்தை அறுவடை செய்கின்ற காலத்தில் போதிய விலை கிடைக்காததால் பட்டறையில் இருப்பு வைத்து ஐப்பசி முதல் மார்கழி மாதம் வரை போதிய விலை கிடைக்கும் காலத்தில் விற்பனை செய்து வருகிறோம்.

    தற்போது இந்த சின்ன வெங்காயம் அழுக தொடங்கியது. இதனால் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்த விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே சின்னவெங்காய விவசாயிகளுக்கு மானிய விலையை அரசு வழங்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள சின்ன வெங்காயம் சேதத்தை கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட விசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வரை நஷ்டு ஈடு வழங்க வேண்டும்.சின்ன வெங்காயம் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசே கொள்முதல் மையம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    போத்தனூர் ரெயில்வே பணியாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், போத்தனூர் ரெயில் நிலையம் கோவையில் 2-வது பெரிய ரெயில் நிலையமாக உள்ளது.

    இங்கு ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவு இட வசதி உள்ளது. ஆனால் இங்கு ரெயில்கள் நின்று செல்வதில்லை. இந்த ரெயில் நிலையத்தை 2-வது ரெயில் நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.

    கோவை மேட்டுப்பாளையம் சாலை எருகம்பெனி ஜீவா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் 200 குடும்பத்தினர் இப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

    கடந்த 30 வருடத்திற்கு முன் குடியிருப்புக்கு 85 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பணம் கட்டினோம். தற்போது எங்களை காலி செய்து கீரணத்தம் பகுதியில் உள்ள குடியிருப்புக்கு செல்லுமாறு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

    எங்கள் குழந்தைகள் இப்பகுதியில் தான் படித்து வருகிறார்கள். எங்களுக்கு மாநகராட்சி எல்லை பகுதியில் மாற்று இடம் வழங்க வேண்டும் என கூறி உள்ளனர்.

    கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் கே.மோகன்ராஜ் கோவை கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கோவை வெரைட்டிஹால் ரோட்டில் போலீஸ் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு உள்ளது. இதன் சுற்றுச்சுவர் இடிந்து பல ஆண்டுகள் ஆகிறது. போலீசார் இரவு பகல் பாராமல் மக்கள் பாதுகாப்பு பணிக்கு சென்று விடுகின்றனர்.

    போலீஸ் நிலையத்தையொட்டி ரெயில் நிலையம் உள்ளது. டாஸ்மாக் மதுக்கடையும் உள்ளது. பயணிகள் மற்றும் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு தகாத வார்த்தைகளில் பேசிவருகிறார்கள். சுற்றுச்சுவர் இல்லாமல் இருக்கும் குடியிருப்பால் போலீசாரின் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

    தற்போது ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலைய சுற்றுச்சுவர் பணி நடைபெற்று வருகிறது. அதேபோன்று வெரைட்டிஹால் காவலர் குடியிருப்பு சுற்றுச்சுவரை கட்டிக்கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றதால் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் மனு கொடுக்க வந்தவர்களை சோதனை செய்த பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.

    சோதனையின் போது கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அரசு ஊழியர் ஒருவர் வந்தார். அவரிடம் போலீசார் சோதனை செய்த போது அவர் தனது அடையாள அட்டையை காண்பித்தார்.

    அவர் வைத்திருந்த பையை திறந்து காண்பிக்கும் படி போலீசார் கூறினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது பையை திறந்து அதில் வைத்திருந்த சாப்பாடு பாக்சை திறந்து அதனை வெளியே கொட்டி விட்டு சென்று விட்டார்.இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. #tamilnews
    Next Story
    ×