search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரண விவகாரம்: அப்பல்லோ டாக்டர்கள்- நர்சுகளிடம் சசிகலா வக்கீல் குறுக்கு விசாரணை
    X

    ஜெயலலிதா மரண விவகாரம்: அப்பல்லோ டாக்டர்கள்- நர்சுகளிடம் சசிகலா வக்கீல் குறுக்கு விசாரணை

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராகிய அப்பல்லோ டாக்டர்கள்- நர்சுகள் 7 பேரிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தினார். #jayalalithaa
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழக அரசு கடந்த ஓராண்டுக்கு முன்னர் இந்த விசாரணை ஆணையத்தை நியமித்தது.

    இதனையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்துவதற்கு வசதியாக மெரினா கடற்கரையையொட்டியுள்ள எழிலகத்தில் தனியாக அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர். ஓய்வு பெற்ற சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் பலமுறை விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.

    அவரைப் போல அப்போது உயர் பொறுப்புகளில் இருந்த போலீஸ் அதிகாரிகள் பலரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்தனர்.


    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சசிகலா குடும்பத்தினர் பலரும் சம்மனை ஏற்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார்கள்.

    ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரையில் அவரிடம் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும், அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகளுக்கும் தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இது தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்திய ஆணையம் பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளது.


    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தருமாறு கேட்டிருந்தது. ஆனால் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமோ, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பதிவான வீடியோ காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், அப்போது பதிவான காட்சிகள் அழிந்து விட்டதாகவும் கூறியது. இதனை ஏற்க மறுத்த ஆணையம், அப்பல்லோ நிர்வாகத்திடம் மீண்டும் உரிய விளக்கம் கேட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகுமாறு அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

    இதனை ஏற்று டாக்டர்கள் ராமச்சந்திரன் அர்ச்சனா, சினேகாஸ்ரீ ஆகியோர் இன்று ஆஜரானார்கள். எக்கோ டெக்னீசியன் நளினி, செவிலியர்கள் ஷில்பா, விஜய லட்சுமி, பிரேமா ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள்.

    இவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, நடந்தது என்ன? என்பது தொடர்பாக அவர் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை செய்தார்.

    அப்பல்லோ நிர்வாக அதிகாரியான சுப்பையா விஸ்வநாதன் நாளை ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுடன் டாக்டர்கள் பத்மாவதி, வெங்கட்ராமன் ஆகியோரும் ஆஜராகிறார்கள்.

    நாளை மறுநாள் (27-ந் தேதி) டாக்டர்கள் ரவிக்குமார், பாஸ்கரன், செந்தில் குமார், சாய்சதீஷ் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.

    ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த ஓராண்டாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில் அப்பல்லோ நிர்வாகத்திடமும், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடமும் ஆணையம் இறுதிக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

    இதனால் ஆணையத்தின் விசாரணை எப்போது முடியும்? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்ம முடிச்சுகள் அவிழுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சசிகலாவிடம் விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் விசாரணை ஆணையத்தின் முதல் கட்ட அறிக்கை வெளியாகும் என்று தெரிகிறது. #jayalalithaa #Sasikala
    Next Story
    ×