search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வில் சாதாரண விவசாயி கூட முதல்-அமைச்சராக வர முடியும் - எடப்பாடி பழனிசாமி
    X

    அ.தி.மு.க.வில் சாதாரண விவசாயி கூட முதல்-அமைச்சராக வர முடியும் - எடப்பாடி பழனிசாமி

    தி.மு.க.வில் வாரிசு அரசியல் தான் இருக்கிறது என்றும், அ.தி.மு.க.வில் தான் சாதாரண விவசாயி கூட முதல்-அமைச்சராக வர முடியும் என்றும் நெல்லையில் எடப்பாடி பழனிசாமி பேசினார். #edappadipalaniswami
    நெல்லை:

    நெல்லை சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கே.டி.சி. நகரில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கினார். அவரைத் தொடர்ந்து கட்சியை கட்டிக் காத்த ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றியைத் தேடித் தந்தீர்கள். அதேபோல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், ஜெயலலிதாவுக்கு கொடுத்த அதே ஆதரவை அ.தி.மு.க. அரசிற்கும் அளிக்க வேண்டும்.

    37 நாடாளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் வழங்கிய காரணத்தினால் தான் நாம் தமிழகத்திற்குத் தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெற முடிந்தது. அதே நிலையை நீங்கள் உருவாக்கித் தரவேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்திலே கேட்டுக்கொள்கிறேன். இன்றைக்கு எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை எதிர்க்கின்றார்கள். ஜெயலலிதா மறைந்த பிறகு இந்த ஆட்சி கவிழ்ந்து விடும், உடைந்து விடும் என்று எதிர்க்கட்சியினர் கனவு கண்டார்கள். ஆனால், இங்கே குழுமியிருக்கின்ற மக்களுடைய நல் ஆதரவோடு, இருபெரும் தலைவர்களின் ஆசியோடு அ.தி.மு.க. பலம் பொருந்திய இயக்கமாக முன்னேறியிருக்கிறது.

    இந்திய துணைக்கண்டத்திலேயே நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அ.தி.மு.க.வை உருவாக்கித் தந்துவிட்டு தான் ஜெயலலிதா சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆர். தன் வாழ்நாள் முழுவதும் நாட்டு மக்களுக்காக உழைத்து, நாட்டு மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக துவக்கிய கட்சி அ.தி.மு.க. ஆனால், தி.மு.க. குடும்பத்திற்காக இருக்கின்ற கட்சி. கருணாநிதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின், அவருக்கு பிறகு உதயநிதி, அவருக்குப் பிறகு அவருடைய மகன். ஆக, வாரிசு அரசியல் அங்கே இருக்கின்றன. இங்கே அப்படியல்ல, உழைக்கின்றவர்கள், இந்த இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கின்றவர்கள் இருக்கிறார்கள்.


    நான் விவசாயக் குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்தவன், மேடையிலே வீற்றிருப்பவர்கள் எல்லாம் சாதாரண குடும்பத்திலே பிறந்து வளர்ந்தவர்கள், உழைக்கின்றவர்கள், உழைத்து முன்னுக்கு வந்தவர்கள். ஆனால் மு.க.ஸ்டாலின், தன்னுடைய தகப்பனார் கருணாநிதிக்கு பிறகு தி.மு.க. தலைவராகி உள்ளார். எத்தனையோ தி.மு.க.வினர் இருக்கிறார்கள். கட்சிக்கு உழைத்தவர்கள் இருக்கிறார்கள். யாராவது தலைவர் பதவிக்கு வர முடியுமா?. அ.தி.மு.க.வில் தான் சாதாரண விவசாயி கூட தமிழகத்தினுடைய முதல்-அமைச்சராக வர முடியும் என்ற நிலை இருக்கிறது.

    இங்கே கூட்டத்தில் இருப்பவர் கூட ஒரு காலத்தில் நிச்சயம் பதவிக்கு வரமுடியும். அது அ.தி.மு.க.வில் தான் முடியும். தி.மு.க.வில் முடியாது. ஏனென்று சொன்னால், அது குடும்ப அரசியலாக மாறிவிட்டது. தனக்கு, பேரனுக்கு பதவி வேண்டும், மகனுக்கு பதவி வேண்டும், மகளுக்கு பதவி வேண்டும். அப்படித்தான் குடும்ப அரசியல் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கருணாநிதி எப்பொழுதாவது டெல்லிக்கு செல்கின்ற பொழுது மக்களின் பிரச்சினையை பேசியிருக்கின்றாரா? கிடையவே கிடையாது.

    தன் மகளுக்கு என்ன பதவி கிடைக்க வேண்டும், பேரனுக்கு என்ன பதவி கிடைக்க வேண்டும், மகனுக்கு என்ன பதவி கிடைக்க வேண்டும் என்பதை பேசுவதற்காகத் தான் டெல்லி செல்வாரோயொழிய, தமிழக மக்களுடைய நலன் காப்பதற்காக எந்த ஒரு முறையாவது டெல்லிக்குச் சென்று வாதாடியிருக்கின்றாரா? எண்ணிப் பாருங்கள். அவர்தான் அப்படியென்றால், அவருடைய மகனும் அப்படித்தான். நாள்தோறும் ஒரு பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றார், இங்கே ஊழல், அங்கே ஊழல் என்று சொல்லி வருகிறார்.

    ஓட்டுமொத்த ஊழலினுடைய உருவமே தி.மு.க. தான். தி.மு.க. என்றால் ஊழல், ஊழலென்றால் தி.மு.க., அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட ஒரே கட்சி தி.மு.க. தான். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி தி.மு.க. ஒன்று தான், வேறு எந்த கட்சியும் ஊழலுக்காக கலைக்கப்படவில்லை. ஆகவே, அப்படிப்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள், அந்தக் கட்சியினுடைய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. அரசுக்கு எதிராக இன்றைக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.  #edappadipalaniswami #karunanidhi #mkstalin
    Next Story
    ×