search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் தொடங்கிய எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னையில் 30ந்தேதி நிறைவு பெறுகிறது
    X

    மதுரையில் தொடங்கிய எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னையில் 30ந்தேதி நிறைவு பெறுகிறது

    மதுரையில் தொடங்கிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சென்னையில் வருகிற 30-ந்தேதி நிறைவு பெறுகிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான விரிவான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். #MGRCenturyCeremony #EdappadiPalaniswami
    சென்னை:

    அ.தி.மு.க. நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா பிறந்தநாள் மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறும்போதும், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன், செய்தித்துறை இயக்குனர் பொ.சங்கர், கூடுதல் இயக்குனர் எழிலழகன் ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி, விழாவை சிறப்பாக நடத்தி முடிக்கிறார்.



    முன்னதாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சார்பில் கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந்தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. உடனடியாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குழு அமைக்கப்பட்டது.

    இதனையடுத்து மதுரையில் கடந்த ஆண்டு (2017) ஜூன் 30-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 30 மாவட்டங்களில் நடத்தப்பட்டு, 31-வது மாவட்டமாக குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாளை (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.

    இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மதுரையில் தொடங்கிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பயணம் தலைநகர் சென்னையில் வருகிற 30-ந்தேதி நிறைவு பெற உள்ளது. இந்த நிறைவு விழாவை ஒட்டுமொத்த எம்.ஜி.ஆர். விசுவாசிகள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாட்டை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ளார்.

    தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்து இருக்கிறார். 7 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் போடப்படுகின்றன.

    விழா நடைபெறும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுடன் இணைந்து தமிழ்நாடு பொன் விழாவும் நடைபெற உள்ளது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

    நிகழ்ச்சிக்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர்கள் வாழ்த்துரை வழங்குகின்றனர். பகல் 2 மணியளவில், விழா மேடையில் எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் வாழ்த்துரை பட்டியலில் எதிர்க்கட்சித்தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பெயரும் இடம் பெற்றுள்ளது.  #MGRCenturyCeremony #EdappadiPalaniswami
    Next Story
    ×