search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனியில் மணல் கடத்தல்-கள்ளச்சந்தை மதுபானம் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் வசதி
    X

    தேனியில் மணல் கடத்தல்-கள்ளச்சந்தை மதுபானம் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் வசதி

    தேனி மாவட்டத்தில் மணல் கடத்தல் மற்றும் கள்ளத்தனமாக மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தொடர்பாக பொதுமக்கள் வாட்ஸ்அப்பில் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் போன்றவற்றில் அனுமதியின்றி வண்டல் மண், களிமண், கிராவல் மண் சட்ட விரோதமாக எடுப்பதை தவிர்ப்பதற்காகவும், ரேசன் கடைகளில் இருந்து அத்தியாவசிய பொருட்களான அரிசி, மண்எண்ணெய், பாமாயில், சீனி மற்றும் பருப்பு போன்றவைகள் கடத்திச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைகளைக் காட்டிலும் கூடுதலாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது, அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து வேறு கடைகள், இடங்களில் மதுபானங்கள் விற்பது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கூடுதலான நேரங்களில் மதுபானம் விற்பனை செய்வது போன்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும், உரிமம் இன்றி செயல்படும் மதுபானக் கூடங்கள், சட்டவிரோதமாக போதைப் பொருள்கள் விற்பனை செய்வது குறித்து நடவடிக்கை மேற்கொள்வதற்காகவும் தனியாக புகார் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த புகார்களை புகைப்படங்களாகவோ, குறுஞ்செய்திகளாகவோ, வாட்ஸ்ஆப் செய்திகளாகவோ 94877 71077 என்ற எண்ணிற்கு செல்போன் மூலம் தெரிவிக்கலாம். மேலும் இந்த எண்ணில் பிரத்தியோகமாக கைசாலா என்ற செயலியின் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேற்கண்ட விவரங்கள் குறித்து கைசாலா என்ற செயலியில் புகைப்படத்துடன் தெரிவிக்கும் போது புகார் தெரிவிக்கும் இடம் சரியான அமைவிடம் குறித்து தெரிந்து கொள்ள இயலும் என்பதால் விரைந்து குற்றச்செயல் நடைபெறும் இடத்தினை சென்றடைய இயலும்.

    இந்த எண்ணில் பெறப்படும்புகார்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக வட்ட அளவில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் புகார்களை வாட்ஸ்ஆப் எண்ணிற்கு புகைப் படங்கள், குறுஞ்செய்திகளாக தெரிவித்து சட்ட விரோதமாக நடைபெறும் குற்றச் செயல்களை களைவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×