search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரணம் - ஆளுநர் மாளிகைக்கு விசாரணை ஆணையம் சரமாரி கேள்வி
    X

    ஜெயலலிதா மரணம் - ஆளுநர் மாளிகைக்கு விசாரணை ஆணையம் சரமாரி கேள்வி

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் இன்று ஆளுநர் மாளிகைக்கு சரமாரி கேள்விகளை கேட்டுள்ளது. #Jayalalithadeath #Apollohospita #Rajbhavan
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய விசாரணை கமி‌ஷனின் காலம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

    நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர், அப்பல்லோ ஆஸ்பத்திரி நர்சுகள், டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர், செயலாளர் என அனைத்து தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

    விசாரணை கமி‌ஷனில் சசிகலா சார்பில் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் சாட்சியம் அளித்தும் குறுக்கு விசாரணை நடத்தியும் வருகிறார்.



    இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் இன்று ஆளுநர் மாளிகைக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இதுதொடர்பாக விசாரணை ஆணையம் கூறுகையில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எத்தனை மருத்துவ குறிப்புகள் ராஜ்பவனுக்கு அனுப்பப்பட்டது? அங்கிருந்து மருத்துவ அறிக்கைகள் பெறப்பட்டு இருப்பின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டதா?

    ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜெயலலிதாவை பார்த்துவிட்டு சென்ற பிறகு ராஜ்பவனில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தகவல் அனுப்பப்பட்டதா?

    மேலும், ஜெயலலிதா உடல்நிலை, அவருக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ, எய்ம்ஸ், ராஜ்பவன் இடையே கடிதத் தொடர்பு ஏதேனும் இருந்ததா? என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

    ஏற்கனவே, அப்பல்லோ மருத்துவமனை சார்பில் விசாரணை ஆணையத்துக்கு கடந்த 11-ம் தேதி அனுப்பப்பட்ட கடிதத்தில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி. டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Jayalalithadeath #Apollohospita #Rajbhawan
    Next Story
    ×