search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம்-கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
    X

    விழுப்புரம்-கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

    விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மயிலத்தில் 50 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் விழுப்புரத்தில் மழை பெய்தது. இந்த மழை 6.20 மணி வரை நீடித்தது. அதன்பிறகு இரவு 12 மணி அளவில் இடி-மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 45 நிமிடங்கள் பெய்தது.

    இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது.

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான கூட்டேரிப்பட்டு, ரெட்டணை, குணமங்கலம், வெளியனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு பலத்த சூறாவளி காற்று வீசியது. சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது.

    தெருக்களில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து அடித்த சூறாவளி காற்றால் மயிலம், ரெட்டணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரம் மற்றும் ஊர் பகுதிகளில் இருந்த 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதில் பல மரங்கள் மேலே சென்ற மின்வயர்கள் மீது விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதனால் அந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மின்வயர்கள் மீது விழுந்த மரங்களை அப்புறப்படுத்ததால் இரவு முழுவதும் மின்சாரம் வரவில்லை. விடிய விடிய மின்தடை நீடித்தது. இன்று காலை 10 மணி வரை மின்சாரம் வரவில்லை. இரவில் கொசுக்கடியால் தூங்க முடியாமல் முதியவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். திருவெண்ணைநல்லூர் பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    திருவெண்ணைநல்லூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல் பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தன. தற்போது பெய்த இந்த மழையால் நெல் பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான எலவ னாசூர் கோட்டை, மடப்பட்டு, களமருதூர், காட்டு நெமிலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 9 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இடை விடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதேபோல் கடலூரிலும் நேற்று மாலை 6 மணிக்கு லேசான மழை பெய்ய தொடங்கியது. சற்று நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

    இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இடி-மின்னலுடன் பெய்த மழையால் சாலையோர பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

    இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணியில் இருந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 8 மணி வரை இந்த மழை நீடித்தது.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.

    வீராணம் ஏரி மற்று அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றுமாலை லேசான மழை பெய்தது. இன்று காலை ஏரியின் நீர் மட்டம் 46.80 அடியாக உள்ளது. ஏரியில் இருந்து விவசாயத்துக்கு 256 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் சென்னை குடி நீருக்காக 74 கனஅடி தண்ணீர் ஏரியில் இருந்து அனுப்பப்படுகிறது. 

    Next Story
    ×