search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாநகர் உணவுப்பொருள் சேமிப்பு கிடங்கில் அமைச்சர் காமராஜ் திடீர் ஆய்வு
    X

    அண்ணாநகர் உணவுப்பொருள் சேமிப்பு கிடங்கில் அமைச்சர் காமராஜ் திடீர் ஆய்வு

    சென்னையில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் இன்று காலை உணவுப் பொருள் சேமிப்பு கிடங்குக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். #MinisterKamaraj
    சென்னை:

    சென்னை அண்ணா நகரில் உணவுப்பொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கிருந்து மத்திய சென்னை பகுதியில் உள்ள ரே‌ஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்றவை அனுப்பி வைக்கப்படுகின்றன.

    மழைக்காலம் தொடங்கி விட்டதால் சேமிப்பு கிடங்கில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய அமைச்சர் காமராஜ் இன்று காலையில் அங்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டையில் இருந்த அரிசியை எடுத்து பார்த்து தரமாக உள்ளதா? என்று பார்வையிட்டார். பாமாயில் வைக்கப்பட்டுள்ள அட்டை பெட்டியில் ‘கசிவு’ ஏற்பட்டுள்ளதா? என்றும் பார்த்தார்.

    அமைச்சருடன் உயர் அதிகாரிகளும் சென்று உணவுப் பொருட்களை பாதுகாத்து வரும் நடவடிக்கை பற்றி எடுத்து கூறினார்கள். மழைக்காலங்களில் குடோனில் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் காமராஜ் விளக்கி கூறினார்.

    அதன்பிறகு அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    3 மாதத்துக்கு தேவையான உணவுப்பொருள் குடோன்களில் இருப்பு உள்ளதா? என்பதை ஆய்வு செய்தேன் தற்போது அரிசி, சர்க்கரை உள்பட அனைத்து பொருட்களும் தேவையான அளவு கையிருப்பு உள்ளது.

    தமிழ்நாட்டில் 1 கோடியே 97 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு ‘ஸ்மார்ட்’ கார்டு வழங்கப்பட்டு விட்டது. இனி புதிதாக ‘ஸ்மார்ட் கார்டு’ வேண்டுவோர் மனு செய்தால் ஆய்வு செய்து வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு நடைமுறையில் மக்களுக்கு எந்த குழப்பமும் இல்லாமல் உணவுப்பொருள் வழங்கப்படுகிறது.

    ரே‌ஷன் கடைகளில் விரைவில் பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்படும் ஆனால் இது கட்டாயமாக்கப்படவில்லை. மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடைமுறை சிக்கல் இன்றி இது செயல்படுத்தப்படும்.

    தமிழகத்தில் ரே‌ஷன் அரிசி கடத்திய 1076 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் கடத்தலில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள்.

    எனவே பெரிய அளவில் கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. குடோன்களில் இருந்து ரே‌ஷன் அரிசியை கடைகளுக்கு கொண்டு செல்வதை கண்காணிக்க லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterKamaraj

    Next Story
    ×