search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 122 கனஅடி தண்ணீர் வந்தது
    X

    மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 122 கனஅடி தண்ணீர் வந்தது

    சில நாட்களாக பெய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 122 கனஅடி தண்ணீர் வந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் இன்னும் கூடுதல் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #ChembarambakkamLake
    சென்னை:

    சென்னை மாநகரில் உள்ள 6 லட்சத்து 73 ஆயிரத்து 339 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர 24,712 தெருக்குழாய்கள் உள்ளன. இதற்கு தேவையான குடிநீர் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் 4 ஏரிகளும் ஓரளவு நிரம்பின. இதன் காரணமாக தற்போது இந்த ஏரிகளில் மொத்தம் 977 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளில் இருந்து மட்டுமே தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது.

    புழல் ஏரியில் 577 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 386 மில்லியன் கனஅடியும், பூண்டி ஏரியில் 13 மில்லியன் கனஅடியும் தண்ணீர் உள்ளது. சோழவரம் ஏரியில் 1 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் சோழவரம் ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்கமுடியாத நிலையில் வறண்டு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 1 கன அடியும், புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 61 கனஅடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து வினாடிக்கு 35 கனஅடி வீதமும் குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. கடல்நீரை குடிநீராக்கும் மையம் மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் குடிநீர் வினியோகம் சமாளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஓரளவு மழை பெய்து வருகிறது. பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் 10 மில்லி மீட்டரும், சோழவரத்தில் 61 மில்லி மீட்டரும், புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் 25 மில்லி மீட்டரும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் 35 மில்லி மீட்டர் அளவும் மழை பெய்தது.

    இந்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 122 கனஅடி தண்ணீர் வந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் இன்னும் கூடுதல் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  #ChembarambakkamLake
    Next Story
    ×