search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரி நாளை முதல் அமல்  - சென்னை மாநகராட்சிக்கு ரூ.300 கோடி கூடுதலாக கிடைக்கும்
    X

    உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரி நாளை முதல் அமல் - சென்னை மாநகராட்சிக்கு ரூ.300 கோடி கூடுதலாக கிடைக்கும்

    தமிழகத்தில் உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரி நாளை முதல் அமலுக்குவருகிறது. இந்த வரி வசூல் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ரூ.300 கோடி கூடுதலாக கிடைக்கும். #ChennaiCorporation #PropertyTax

    சென்னை:

    தமிழ்நாட்டில் சொத்துவரி விதிப்பு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

    அந்த அடிப்படையில் கடந்த 2008-ம் ஆண்டு அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சொத்துவரியில் திருத்தம் செய்யப்பட்டன. ஆனால் அப்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் சொத்து வரியில் திருத்தம் செய்யப்பட வில்லை.

    இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் சொத்துவரியை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய வரி விதிப்பு பட்டியலை தயாரித்த னர். கடந்த ஜூலை மாதம் அந்த வரிவிதிப்பு விவரம் வெளியிடப்பட்டது.

    இதில் சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சென்னை மாநாகரட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்துவரியை மறு ஆய்வு செய்ய உத்தர விட்டனர்.

    இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் உங்கள் வீட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு? அதில் எத்தனை சதுர அடிக்கு வீடு கட்டப்பட்டுள்ளது? எத்தனை அறைகள் உள்ளன? என்பன போன்ற விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன.

    சுமார் 12 லட்சம் சொத்துக்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. அவர்கள் சொத்துவரி தொடர்பான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு ஆகஸ்டு 31-ந்தேதி இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் ஆகஸ்டு இறுதி வரை கொஞ்சம் பேர் தான் வரித்தொடர்பான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து இருந்தனர். இதையடுத்து செப்டம்பர் மாதம் 16-ந்தேதி வரை வீட்டின் அளவு பற்றிய தகவல்களை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் சுமார் 8 லட்சம் பேர் தங்களது வீட்டின் அளவு பற்றி தகவல்களை பூர்த்தி செய்து கொடுத்து இருந்தனர். மக்கள் அளித்துள்ள சுய தகவல் விண்ணப்பங்களின் அடிப்படையில் ஒவ்வொரு வீட்டிற்கும் புதிய வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டன.


    அந்த புதிய வரி விதிப்பு பற்றிய தகவல்கள் வீட்டின் சொந்தக்காரர்களுக்கு ‘குறுஞ்செய்தி’ மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிய வரியை உடனே கட்டும்படி பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    நாளை (புதன்கிழமை) முதல் புதிய வரி விதிப்பின் அடிப்படையில் சொத்து வரிகளை கட்ட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த பருவத்திற்கான சொத்து வரியை கட்டியவர்கள் கட்டிய தொகையை கழித்துவிட்டு மீதமுள்ள தொகையை செலுத்த வேண் டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் அனைவரும் புதிய வரி விதிப்பின்படி சொத்து வரியை கட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ரூ.300 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    சில இடங்களில் பாதிகட்டப்பட்ட நிலையில் கட்டிடங்கள் உள்ளன. அந்த கட்டிடங்கள் உள்ள பகுதிகளுக்கு சொத்து வரியில் 20 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

    சொத்துவரி அதிகரிக்கப்பட்டு இருப்பதற்கு பெரும் பாலான குடியிருப்பு வாசிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சொத்து வரி கட்டுவதற்கு கால அவகாசம் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக சொத்துவரி ஆண்டுக்கு 2 தடவை வசூலிக்கப்படுகிறது.

    ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை முதல் அரையாண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரை 2-வது அரையாண்டும் கணக்கிடப்பட்டு சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.

    சென்னை மாநகராட்சி பகுதியில் இன்னமும் 4 லட்சம் வீட்டுக்காரர்கள் தங்களது வீட்டின் அளவு பற்றிய சுய தகவலை சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் ஒப்படைக்காமல் இருக்கிறார்கள். அவர்களது இல்லங்களுக்கு வருவாய் அதிகாரிகள் சென்று விண்ணப்பத்தை வழங்கி சொத்து பற்றிய தகவல்களை சேகரிக்க உள்ளனர்.

    இந்த பணிகள் முடிந்த பிறகு சென்னை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வீட்டின் சொத்து வரி தொடர்பான தகவல்கள் சரியாக உள்ளதா? என்ற ஆய்வு பணியை நடத்த உள்ளனர்.#ChennaiCorporation #PropertyTax

    Next Story
    ×