search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் - சேலத்தில் முக ஸ்டாலின் பங்கேற்பு
    X

    தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் - சேலத்தில் முக ஸ்டாலின் பங்கேற்பு

    குட்கா ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சேலத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். #MKStalin #DMK
    சென்னை:

    தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய உயர் போலீஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் சுமார் ரூ.40 கோடி லஞ்சம் பெற்ற விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி இது தொடர்பாக 5 பேரை கைது செய்தனர். குட்கா விற்பனையில் நடந்துள்ள பண பரிமாற்ற மோசடிகள் பற்றி அமலாக்கத் துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

    மத்திய வருமான வரித்துறை ஆய்வின் மூலம் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களில் முதல்-அமைச்சரின் உறவினர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுபோல துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் வெளிநாடுகளில் பல கோடி ரூபாயை முதலீடு செய்து இருப்பதாக தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள்.

    சமீபத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலகக் கோரி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று (18-ந்தேதி) காலை 10 மணிக்கு தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கடந்த 8-ந்தேதி சென்னையில் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன்படி தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்று அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களையும் முழக்கங்களையும் எழுப்பினர்.



    சேலம் கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் குட்கா ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மேலும் அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும், குட்கா ஊழலில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கோரியும் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் முழக்கங்களை எழுப்பிய படியே இருந்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக சேலம் கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து காலை முதலே ஏராளமான தொண்டர்கள் வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல சேலம் கலெக்டர் அலுவலக பகுதியில் பல ஆயிரம் தொண்டர்கள் குவிந்தனர். பெரியார் பாலத்தின் இரு பகுதி மற்றும் கலெக்டர் அலுவலக பகுதிகளில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

    தி.மு.க தலைவராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் முதல் போராட்டம் என்பதால் தொண்டர்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். அவர்களை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் இரா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    சென்னையில் 5 இடங்களில் தி.மு.க.வினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான தொண்டர்கள் கையில் தி.மு.க. கொடி ஏந்தி ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக கோரி கோ‌ஷமிட்டனர்.

    தமிழ்நாடு முழுவதும் அனைத்து முக்கிய ஊர்களிலும் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. #MKStalin #DMK

    Next Story
    ×