search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் மாநில மாநாட்டில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசிய காட்சி.
    X
    பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் மாநில மாநாட்டில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசிய காட்சி.

    பாஜக-விடம் கேள்வி கேட்க திமுக, அதிமுக-வுக்கு எந்த தகுதியும் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

    பா.ஜ.க.விடம் கேள்வி கேட்க தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். #BJP #PonRadhakrishnan #TamilisaiSoundararajan
    திருச்சி:

    திருச்சியில் பா.ஜ.க. அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு சார்பில் தொழிலாளர்கள் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது:-

    நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 93 சதவீதம் பேர் அமைப்பு சாரா தொழிலாளர்கள். அதை கவனத்தில் கொண்டு தான் பிரதமர் நரேந்திரமோடி ஆம் ஆத்மி பீமயோஜனா திட்டம் என்ற காப்பீட்டு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி இருக்கிறார்.

    பா.ஜ.க.விடம் கேள்வி கேட்க தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை. மாறாக 50 ஆண்டுகளாக தமிழகத்திற்கு எதையும் செய்யாத திராவிட கழகங்களிடம் கேள்வி கேட்கும் உரிமை பா.ஜ.க.வுக்கு மட்டுமே இருக்கிறது. பெரியார் சிலை மீது காலணி வீசப்பட்டிருப்பது மகிழ்ச்சி தரக்கூடியதும் அல்ல. உதாசீனப்படுத்தக் கூடியதும் அல்ல.

    இன்றைய நிலையில் தமிழகத்தில் பெரியாருக்கு எதிராக தமிழ் தீவிரவாத அமைப்புகள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகிறது. எந்த கட்சியையும் அதன் தலைவர்களையும் நாங்கள் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க மாட்டோம். தமிழகத்தில் திராவிட கழகங்களின் கொள்கைகள் செத்துவிட்டன. அதை மீட்க முடியாது. பா.ஜ.க.வின் கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்களை மக்களிடம் சொல்ல வேண்டிய தருணம் வந்திருக்கிறது. மக்களை நாம் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

    தமிழக அரசுக்கு மத்திய அரசு தொடர்ந்து மிகப்பெரிய ஆதரவை அளித்து வருகிறது. இங்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறாமல் இருந்ததால், இரண்டாம் கட்ட நிதி கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து முதல்வர் பழனிசாமியும் குறிப்பிட்டிருந்தார். இந்த தகவல் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பயனாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.758.06 கோடி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.631.98 கோடி என சுமார் ரூ.1400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே உள்ளாட்சி தேர்தலை மிக விரைவில் நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்த கட்சியின் கூட்டணிக்காகவும் ஏங்கும் நிலையில் பா.ஜ.க. இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசியதாவது:-

    மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழகத்திற்கு கொண்டு வந்த ஒரு திட்டம் பற்றி கூற முடியுமா? அதை பட்டியலிடுவதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தயாரா? தமிழக எல்லையை தாண்டினால் தி.மு.க.வுக்கு முகவரி கிடையாது. 22 மாநிலங்களில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வை இவர்கள் காலூன்ற விடமாட்டோம் எனக்கூறுவது வேடிக்கை.


    தமிழக அ.தி.மு.க. அரசையே அசைக்க முடியாத ஸ்டாலினால் 22 மாநிலங்களில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வை எப்படி அழிக்க முடியும். மோடி அரசை அல்ல. அ.தி.மு.க.வை கூட ஸ்டாலினால் அசைக்க முடியாது.

    நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவருக்காக அதாவது கருணாநிதிக்காக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால் அந்த நன்றி உணர்வு இல்லாமல் தி.மு.க.வினர் பா.ஜ.க.வை பற்றி பேசி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்பார் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் போலீசார் மற்றும் நீதிமன்றம் குறித்து விமர்சித்து பேசிய விவகாரம் காரணமாக அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. #BJP #TamilisaiSoundararajan #PonRadhakrishnan #DMK #ADMK
    Next Story
    ×