search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரைவர் சாமர்த்தியத்தால் அதிக உயிர் சேதம் தவிர்ப்பு
    X

    டிரைவர் சாமர்த்தியத்தால் அதிக உயிர் சேதம் தவிர்ப்பு

    அரசு பஸ்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் பழனி-அந்தியூர் அரசு பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
    அரச்சலூர்:

    சேலத்தில் இருந்து கொடைக்கானல் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    பஸ்சை பழனிச்சாமி (வயது 50) ஓட்டினார். கண்டக்டராக ஆறுமுகம் (47) இருந்தார்.

    இதேபோல பழனியில் இருந்த அந்தியூர் நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை சிவகாசி (36) என்பவர் ஓட்டி வந்தார். முருகேஷ் (45) கண்டக்டராக இருந்தார்.

    இன்று காலை 7.45 மணி அளவில் 2 பஸ்களும் அரச்சலூரை அடுத்த தலவுமலை அருகே உள்ள வெள்ளக்கவுண்டன்வலசு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

    திடீரென 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட பழனி- அந்தியூர் பஸ் டிரைவர் சிவகாசி பஸ்சை இடது புறமாக திருப்பினார்.

    இருந்தபோதிலும் அந்த பஸ்சின் பின் பகுதியில் வலது புறத்தில் சேலம்- கொடைக்கானல் அரசு பஸ் மோதியது. இதனால் ரோட்டோரத்தில் இருந்த வேப்பமரத்தை நோக்கி பழனி-அந்தியூர் பஸ் சென்றது.

    அப்போதும் சுதாரித்துக் கொண்ட டிரைவர் வேப்ப மரத்தின் மீது பஸ் நேருக்கு நேர் பலமாக மோதாமல் இருக்க திருப்பினார். இருந்த போதிலும் பஸ்சின் பின் பகுதி வேப்ப மரத்தின் மீது மோதியது.

    இந்த விபத்தில் பழனி- அந்தியூர் பஸ்சின் பின் பகுதியும், சேலம்-கொடைக்கானல் பஸ்சின் முன் பகுதியும் சேதம் அடைந்தது. சேலம்-கொடைக்கானல் பஸ்சில் இருந்த பயணிகள் தப்பினர்.

    ஆனால் பழனி-அந்தியூர் பஸ்சின் பின் பகுதியில் அமர்ந்து பயணித்த பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர்.

    பலியானவர் பெயர் கவுசிக் (34). திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர். கார் டிரைவராக இருந்தார். அவருக்கு ஜேஸ்மின் (26) என்ற மனைவியும், அப்ரின் (8) என்ற மகளும், ஆஷிக் (6) என்ற மகனும் உள்ளனர்.

    தகவல் கிடைத்ததும் அரச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    பலியான கவுசிக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த தீபக் (27), பிரேம்குமார் (17), செந்தில் (43), குமாரசாமி (43), யுவராஜ் (24) உள்பட 6 பேரும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அரச்சலூர் பகுதியில் இன்று பரபரப்பு நிலவியது. #tamilnews
    Next Story
    ×