search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை மேரீஸ் கார்னர் ரெயில்வே கீழ்பாலத்தில் தேங்கி கிடந்த மழைதண்ணீரில் பஸ் சிக்கி இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    தஞ்சை மேரீஸ் கார்னர் ரெயில்வே கீழ்பாலத்தில் தேங்கி கிடந்த மழைதண்ணீரில் பஸ் சிக்கி இருப்பதை படத்தில் காணலாம்.

    டெல்டா மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை

    டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் பெய்தமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வாட்டி எடுத்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சை நகரில் லேசாக மழை பெய்தது. பின்னர் கடும் வெயில் அடிக்க ஆரம்பித்தது. நேற்றும் காலையில் இருந்தே வெயில் வாட்டி எடுத்தது.

    இதைத் தொடர்ந்து மாலை நேரத்தில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன.

    திடீரென வானம் மேகம் மூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் மாலை 5.30 மணிக்கு லேசான மழை பிடித்து, பின்னர் பலத்த மழையாக கொட்டியது. இடி - மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 9 மணி வரையிலும் மழை கொட்டி தீர்த்தது. அதன் பின்னரும் லேசான தூறல் விழுந்து கொண்டிருந்தது.

    பலத்த மழையால் ரெயில் நிலையத்தில் மழை நீர் சூழ்ந்து கொண்டது. பின்னர் மழை நீர் டிக்கெட் கவுண்டர் பகுதியில் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் மேரீஸ் கார்னரில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தில் மழை நீர் குளம் போன்று தேங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பஸ் தண்ணீரில் சிக்கி கொண்டது. இதனால் பயணிகள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு டயர்கள் உதவியுடன் பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    இது போன்று தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, வல்லம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

    கும்பகோணத்தில் பலத்த காற்றால் கும்பகோணம் டாக்டர் மூர்த்தி ரோடு ஹவுசிங்யூனிட் பகுதியில் ஒரு புங்க மரம் முறிந்து அருகில் செல்லும் மின் வயரில் விழுந்தது. இதனால் ஒருபுறமுள்ள மின் கம்பம் இரண்டாக முறிந்ததால் அப்பகுதி முழுவதும் இருளில் முழ்கியது.

    இதனையறிந்த மின்சாரத் துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

    மின் ஒயரில் மரம் விழுந்ததால் டாக்டர் மூர்த்தி ரோடு, பாணா துறைதெரு, திருவள்ளுவர் நகர் , நால் ரோடு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டு , போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் விடப்பட்டன.

    டெல்டா மாவட்டங்களில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மி.மீட்டரில் பின்வருமாறு:-

    தஞ்சாவூர் - 49.3
    நாகை - 25.6
    பூதலூர் - 24.2
    திருத்துறைப்பூண்டி - 15.2
    திருவாரூர் - 13.4
    பேராவூரணி - 7.2
    நெய்வாசல் தென்பாதி - 5.6
    ஒரத்தநாடு - 5.2
    வலங்கைமான் - 3.2
    மதுக்கூர் - 1.2
    பட்டுக்கோட்டை - 0.5
    Next Story
    ×