search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் மீதான டெண்டர் புகார் - முறைகேடு எதுவும் நடக்கவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை
    X

    முதல்வர் மீதான டெண்டர் புகார் - முறைகேடு எதுவும் நடக்கவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் மீது இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, முறைகேடு எதுவும் நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. #ChennaiHC
    சென்னை:

    தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

    அதனால், இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நீதிபதி முன்பு கடந்த 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி, ‘நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளை உறவினர்களுக்கு வழங்கியதாக முதல்-அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டதா?

    அந்த விசாரணை நிலை என்ன?. ஒப்பந்த ஒதுக்கீடு முறைகேடுகள் குறித்த விசாரணையின் நிலை என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ‘1991ம் ஆண்டு முதல் எஸ்.பி.கே. நிறுவனம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியிலும் அவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டச்சத்திரம்-தாராபுரம்-அவினாசி பாளையம் 4 வழிச்சாலை ஒப்பந்த பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அதிகரிப்படவில்லை. முதல்-அமைச்சர் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்த அரசின் முன் அனுமதி பெற வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை வெளிப்படையாக தற்போது கூற முடியாது’ என்று கூறினார்.

    இதனையடுத்து இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், தினந்தோறும் நடத்தப்பட்ட விசாரணையின் விரிவான அறிக்கையை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் புலன் விசாரணை தொடர்பான விவரங்களை கொண்ட ரகசிய அறிக்கையை நீதிபதி முன்பு சமர்பித்தார்.


    பின்னர், ‘முதல்-அமைச்சருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் எதுவும் இல்லை. இந்த டெண்டர் வழங்கியதில் எந்த முறைகேடு நடைபெறவில்லை’ என்று அட்வகேட் ஜெனரல் கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஒப்பந்த நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்றார். இதற்கு அட்வகேட் ஜெனரல் கால அவகாசம் கேட்டார். இதற்கு அனுமதித்த நீதிபதி, விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #ChennaiHC #EdappadiPalaniswami
    Next Story
    ×