search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூர் அருகே கார் கவிழ்ந்து 2 பேர் பலி
    X

    ஆம்பூர் அருகே கார் கவிழ்ந்து 2 பேர் பலி

    ஆம்பூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஓசூரை சேர்ந்த வாலிபர் உள்பட 2 பேர் பலியாகினர்.

    ஆம்பூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முனிஸ் அலிகான். இவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் சவுதி அரேபியாவிற்கு ஹஜ் புனித பயணம் சென்றிருந்தார். நேற்றிரவு, விமானம் மூலம் சென்னை திரும்பினர்.

    அவர்களை ஓசூருக்கு அழைத்து வருவதற்காக, முனிஸ் அலிகானின் மகன் முகமதுஅபாஸ் (23) மற்றும் இவரது உறவினர் லியகத் அலித்கான் மகன் ஜுபேர் அலிகான் (40) ஆகிய இருவரும் 2 கார்களை எடுத்து சென்றனர். ஒரு காரில் ஹஜ் பயணம் சென்றவர்கள் வந்தனர்.

    மற்றொரு காரில் முகமது அபாஸ் மற்றும் ஜுபேர் அலிகான் விமான நிலையத்தில் இருந்து ஓசூருக்கு புறப்பட்டனர். அப்போது, ஹஜ் பயணம் சென்றுவிட்டு திரும்பிய தருமபுரி அரபிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் அப்துல்ரகுமான் (38) என்பவரும், லிப்ட் கேட்டு அவர்களுடன் காரில் ஏறி பயணித்தார்.

    சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வேலூரை கடந்து கார்கள் சென்றது. ஆம்பூர் அடுத்த கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் சென்றபோது முகமது அபாஸ் உள்பட 3 பேர் பயணித்த கார், முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றது.

    அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து உருண்டது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த முகமது அபாஸ், ஜுபேர் அலிகான் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    உடன் வந்த பேராசிரியர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். ஆம்பூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேராசிரியரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×