search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபக்சேவின் கருத்து அகம்பாவத்தின் உச்சக்கட்டம்- முத்தரசன் பேட்டி
    X

    ராஜபக்சேவின் கருத்து அகம்பாவத்தின் உச்சக்கட்டம்- முத்தரசன் பேட்டி

    இலங்கையின் இறுதி போரின் போது மத்திய அரசு உள்ளிட்ட பல நாடுகள் எங்களுக்கு உதவி செய்தது என்று ராஜபக்சே கூறியிருப்பது அகம்பாவத்தின் உச்ச கட்டம் என்று முத்தரசன் கூறியுள்ளார். #mutharasan

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு பேச்சு மற்றும் கருத்துரிமையை பறித்து வருகிறது. தமிழகத்தில் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியை பா.ஜ.க. மற்றும் இந்துஅமைப்புகள் எடுத்து வருகிறது. நேற்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, புதுக்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் காவல்துறையையும் நீதிமன்றத்தையும் இழிவாக பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. அவர் மீது உடனடியாக காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மின்சார தட்டுப்பாடே இல்லை என்று கூறுவது நகைப்புக்கு உரியது. நிலக்கரி தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகையின் நேற்றைய கருத்து என்பது அவர்கள் விடுதலையை காலதாமதப்படுத்தும் முயற்சியாகும்.

    டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதி வரை இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் பயிர்கள் கருகி வருகிறது. எனவே டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து போதிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிறைத்துறை அதிகாரிகள் அமைச்சருக்கு நாங்கள் மாதம் ரூ.5லட்சம் வழங்க வேண்டும். ஆகையால் கைதிகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு உல்லாசமாக இருங்கள் என்று கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து துறைகளிலும் இந்த ஆட்சியில் ஊழல் செய்து வருகின்றனர்.

    அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பல்வேறு புகார்கள் இருந்தாலும் அவருக்கு கட்சியின் உயர் பதவி அளித்து இருப்பது ஊழல் செய்தால் அவருக்கு பதவி என்ற ரீதியில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அவர் மீது கை வைத்தால் அவர் மற்றவர்கள் தலையில் கை வைத்து விடுவார் என்று தான், அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.


    இலங்கையின் இறுதி போரின் போது மத்திய அரசு உள்ளிட்ட பல நாடுகள் எங்களுக்கு உதவி செய்தது என்று ராஜபக்சே கூறியிருப்பது அகம்பாவத்தின் உச்ச கட்டம். போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும்.

    தி.மு.க. ஆட்சியில் பின்பற்றிய டெண்டர் முறை தான் தற்போதும் பின்பற்றபடுகிறது என்றும் மேலும் சிங்கிள் டெண்டர் முறை தி.மு.க. ஆட்சியில் தான் இருந்தது என்றும் அதனால் தி.மு.க. ஆட்சியில் தான் ஊழல் நடந்துள்ளதாக முதல்வர் கூறியிருக்கிறார். அப்படி தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடந்தது என்றால் ஏன்? இதுநாள் வரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போதைய தமிழக அரசில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு புகார்கள் உள்ளதால் அவர்கள் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். இனி ஒரு நொடியும் இந்த ஆட்சி தமிழகத்தில் நீடிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #mutharasan #rajapaksa #hraja #ministervijayabaskar

    Next Story
    ×